மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன.
இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும் பழத்தில் சிறந்தது.
மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.
மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன.
மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது.
மாதுளம் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கும் சக்திகொண்டவை.
மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.
தினமும் மாதுளம் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும்; ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் அல்சைமர் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள், தினமும் மாதுளம்பழச் சாறு குடித்துவர, குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளர துணைபுரியும். ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.
மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரைநோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும்.
மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜென்னின் உற்பத்தி குறைந்து, மூட்டுவலி மற்றும் எலும்புத் தேய்மானம் அதிகரிக்கும். இது போன்ற காலங்களில் பெண்கள் தினமும் மாதுளம்பழ ஜூஸ் குடிக்கலாம். அது, உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டும்; எலும்புகள் வலுப்பெற உதவும்.
மாதுளம்பழத்தை உண்பதால், ஈறுகள் மற்றும் பற்களில் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிகின்றன.
தினமும் 100 மி.லி மாதுளம்பழச் சாற்றை பருகிவந்தால், ரத்த நாளங்கள் தளர்வடைந்து, அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்குச் சென்று, இதயம் பலம் பெறும்.
உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளைச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகி, உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல் கிடைக்கும்.
மாதுளை பழங்கள் தொடர்ந்து உட்கொள்வதால் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது. அதனால் பெண்கள் தங்கள் உணவில் மாதுளை பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்வது சிறந்தது.
மாதுளம்பழச் சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால், நாள்பட்ட வறட்டு இருமல் ஓடிவிடும்.
கல்கண்டு, பனீர், தேன், மாதுளம்பழச் சாறு நான்கையும் தலா ஒரு டம்ளர் எடுத்து, கலந்து, உருட்டுப்பாகு பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை நெல்லிக்காய் அளவு எடுத்து, இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் படை, தேமல் போன்ற சரும நோய்கள் மறைந்து, சருமத்தை விட்டே விலகும்.
மாதுளம்பழச் சாறையும் அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்குக் குளிர்ச்சியையும் தரும்.