உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் சுத்திகரிப்பு நிலையமான கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். பொதுவாக, அதிகப்படியான மதுப்பழக்கம், உடல் பருமன் அல்லது சில வகை வைரஸ் தொற்றுகளால் கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது தழும்புகளாக மாறி கல்லீரல் சுருக்கத்தை (Cirrhosis) உருவாக்குகிறது.
ஒருமுறை கல்லீரல் சுருக்கம் ஏற்பட்டுவிட்டால், அந்த பாதிப்பை முழுமையாக குணப்படுத்துவது கடினம். ஆனால், சரியான உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் பாதிப்பு தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். நம் அன்றாட வாழ்க்கையில் நாம் அறியாமலே உட்கொள்ளும் சில உணவுகள் கல்லீரலுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் தற்காத்து கொள்ள தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
அதிக உப்புள்ள உணவுகள்: உப்பில் உள்ள சோடியம் உடலில் நீரை தேக்கி வைக்கும் குணம் கொண்டது. கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே வயிறு மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இந்நேரத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிப்ஸ், ஊறுகாய், இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் மற்றும் ஹோட்டல் உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஒரு நாளைக்கு 1,500 – 2,000 மி.கி. அளவிற்கு மேல் உப்பு சேராமல் பார்த்துக் கொள்வது வீக்கத்தை குறைக்க உதவும்.
மதுப்பழக்கம்: கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டியவற்றில் முதலிடத்தில் இருப்பது மது. கல்லீரல் ஏற்கனவே பலவீனமாக இருப்பதால், மதுவை சுத்திகரிக்க முடியாமல் திணறும். இது ஆரோக்கியமாக இருக்கும் மீதமுள்ள செல்களையும் அழித்து விடும். ஒரு சிறிய அளவு மது கூட மூளையில் குழப்பம் மற்றும் அதீத சோர்வை உண்டாக்கும். எனவே, மதுவை முழுமையாக கைவிட்டு, அதற்கு பதில் மூலிகை டீ அல்லது இளநீர் போன்றவற்றை பருகலாம்.
பொரித்த உணவுகள்: எண்ணெய்யில் பொரித்த சமோசா, வடை, பிரெஞ்சு ஃபிரைஸ் போன்ற உணவுகளில் ‘டிரான்ஸ் ஃபேட்’ (Trans fats) அதிகம். இது கல்லீரலில் கொழுப்பு படிவதை தூண்டும். மேலும், கடைகளில் மீண்டும் மீண்டும் காய்ச்சிய எண்ணெய்யை பயன்படுத்துவதால் உருவாகும் நச்சுக்கள் கல்லீரல் செல்களை தாக்கும். இவற்றுக்கு பதில் உணவை ஆவியில் வேகவைத்தோ அல்லது குறைந்த எண்ணெய்யில் சமைத்தோ சாப்பிடலாம்.
சிவப்பு இறைச்சி: மாடு, ஆடு மற்றும் பன்றி இறைச்சி போன்றவை செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுக்கும். இதில் உள்ள அதிகப்படியான கொழுப்பு மற்றும் இரும்புச்சத்து கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும். மேலும், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளான சாசேஜ், கபாப் போன்றவற்றில் உள்ள ரசாயனங்கள் கல்லீரலுக்கு தேவையற்ற அழுத்தத்தை கொடுக்கும். புரத தேவைக்கு முட்டை வெள்ளைக்கரு அல்லது பருப்பு வகைகளை தேர்ந்தெடுப்பது சிறந்தது.
வேகவைக்காத உணவுகள்: கல்லீரல் பாதிப்பால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இந்நேரத்தில் சமைக்காத மீன் வகைகள், பாதி வெந்த முட்டை அல்லது சரியாக கழுவாத காய்கறிகளை சாப்பிடும் போது கிருமி தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இது உயிருக்கே ஆபத்தான ‘செப்சிஸ்’ போன்ற நிலைக்கு கொண்டு செல்லலாம். எனவே, உணவை நன்றாக 74°C வெப்பநிலைக்கு மேல் வேகவைத்து சாப்பிடுவது பாதுகாப்பானது.
சர்க்கரை மற்றும் இனிப்பு பானங்கள்: குளிர்பானங்கள், இனிப்புகள் மற்றும் மைதாவால் செய்யப்பட்ட உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக்கும். இது இன்சுலின் எதிர்ப்பை உருவாக்கி, கல்லீரலில் மேலும் தழும்புகளை உண்டாக்கும். பழச்சாறுகளை விட முழுப் பழங்களை சிறிய அளவில் எடுத்துக் கொள்ளலாம். ‘ஹை-பிரக்டோஸ் கார்ன் சிரப்’ கலந்த பானங்களை தவிர்ப்பது மிகவும் அவசியம்.
அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள்: முழுமையான ஆடை நீக்கப்படாத பால், வெண்ணெய், நெய் மற்றும் சீஸ் போன்றவற்றில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு பித்தப்பை மற்றும் கல்லீரலின் செயல்பாட்டைப் பாதிக்கும். பன்னீர் போன்ற கொழுப்பு நிறைந்த பொருட்களை தவிர்த்து விட்டு, ஆடை நீக்கிய பால் அல்லது பாதாம் பால் போன்றவற்றை தேர்வு செய்யலாம்.
கல்லீரல் பாதிப்பை கட்டுப்படுத்துவது என்பது ஒரு தவம் போன்றது. முறையான உணவுக்கட்டுப்பாடும், மருத்துவர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சியும் இருந்தால் கல்லீரல் பாதிப்பை தடுத்து நீண்ட காலம் நலமுடன் வாழ முடியும்.

