கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் உடல் ரீதியாகவும், ஹார்மோன் ரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் நிகழும் ஒரு முக்கியமான காலகட்டமாகும். இந்த சமயத்தில் தாயின் உடல்நலம் நேரடியாக குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால், ரத்த அழுத்தம் சீராக இருப்பது மிக அவசியம்.
பொதுவாக, கர்ப்ப காலத்தில் ஓய்வு என்பது கட்டாயமான ஒன்று என்றாலும், அது உடல் உழைப்பற்றநிலையாக மாறிவிட கூடாது என்று நவீன மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. குறிப்பாக, கர்ப்பகாலத்தில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் தாய் மற்றும் சேய் ஆகிய இருவருக்கும் தேவையற்ற மருத்துவ சிக்கல்களை உருவாக்கக்கூடும்.
இதை கட்டுப்படுத்த உடற்பயிற்சிகளோ அல்லது ஜிம்முக்கு சென்று உழைக்க வேண்டிய அவசியமோ இல்லை. மாறாக, நம்முடைய அன்றாட இயல்பான அசைவுகளும், சிறிய வாழ்வியல் மாற்றங்களுமே ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க போதுமானது என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
நீண்ட நேரம் அமர்ந்திருப்பதை தவிர்க்கவும்
American Heart Association-ன் சமீபத்திய ஆய்வின்படி, கர்ப்பிணி பெண்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதை தவிர்த்து, நாள் முழுவதும் அவ்வப்போது சின்ன சின்ன அசைவுகளில் ஈடுபடுவது, ரத்த அழுத்தம் தொடர்பான சிக்கல்களை 30 சதவீதம் வரை குறைப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வை மேற்கொண்ட அயோவா பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் காரா வி்டேக்கர் கூறும்போது, “கர்ப்ப காலத்தில் முறையான உடற்பயிற்சி செய்வது நல்லதுதான் என்றாலும், அதைவிட முக்கியமானது நாள் முழுவதும் நாம் எவ்வளவு நேரம் அமர்ந்திருக்கிறோம் என்பதும், எவ்வளவு தூரம் லேசான அசைவுகளில் இருக்கிறோம் என்பதும்தான்” என்று குறிப்பிடுகிறார். அதாவது, ஒரு மணிநேரம் தீவிரமாக பயிற்சி செய்துவிட்டு, மீதி நேரமெல்லாம் அமர்ந்திருப்பதை விட, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பது அதிக பலன் தருகிறது.
ஆய்வு முடிவுகள் என்ன சொல்கின்றன?
18 முதல் 45 வயதுக்குட்பட்ட சுமார் 470 கர்ப்பிணிப் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களின் அன்றாட செயல்பாடுகளை கண்காணிக்க பிரத்யேக கருவிகள் பொருத்தப்பட்டு, அவர்கள் எவ்வளவு நேரம் அமர்கிறார்கள், நடக்கிறார்கள் மற்றும் தூங்குகிறார்கள் என்பது துல்லியமாக பதிவு செய்யப்பட்டது. அதன் விவரங்கள் பின்வருமாரு..
ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 18.6 சதவீதம் பேருக்கு கர்ப்ப கால ரத்த அழுத்தம் அல்லது ‘பிரீக்ளாம்ப்சியா’ (Preeclampsia) பாதிப்பு ஏற்பட்டது.
யாரெல்லாம் ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கு மேல் அமர்ந்தே இருக்கிறார்களோ, அவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயம் மிக அதிகமாக இருந்தது.
மாறாக, ஒரு நாளில் 6 மணி நேரம் மட்டுமே அமர்ந்து கொண்டு, சுமார் 8 மணி நேரம் லேசான வேலைகளில் (நடப்பது, வீட்டு வேலைகள் செய்வது, நின்று கொண்டு வேலை செய்வது) ஈடுபட்ட பெண்களுக்கு ரத்த அழுத்த பாதிப்பு வெறும் 8 சதவீதமாக மட்டுமே இருந்தது.
ஐந்து மணி நேரத்திற்கு குறைவாக லேசான அசைவுகளில் ஈடுபடும் பெண்களுக்கு பாதிப்பு விகிதம் 16.9 சதவீதமாக உயர்ந்தது.
இதிலிருந்து தெரிவது என்னவென்றால், நாம் எவ்வளவு தூரம் அமர்ந்திருக்கும் நேரத்தை குறைத்து, லேசான அசைவுகளை அதிகரிக்கிறோமோ, அந்தளவுக்கு ரத்த அழுத்த அபாயம் 80 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.
கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் ஏன் முக்கியமானது?
கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் உலகளவில் 5 முதல் 10 சதவீத பெண்களைப் பாதிக்கிறது. இது தாய் மற்றும் கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணியாகும். இப்படியிருக்க, ரத்த அழுத்தம் அதிகமானால்,
குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்க வாய்ப்புள்ளது.
குழந்தையின் பிறப்பு எடை குறைவாக இருக்கலாம்.
தாயின் உடல் உறுப்புகள் (கணையம், சிறுநீரகம்) பாதிக்கப்படலாம்.
தீவிரமான சூழலில் பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படலாம்.
மேலும், கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்த பிரச்சனை வந்த பெண்களுக்கு, பிற்காலத்தில் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் அதிகம் என்று அமெரிக்க இதய சங்கம் எச்சரிக்கிறது. எனவே, ஆரம்பத்திலேயே இதை கட்டுப்படுத்துவது அவசியம்.
அமர்ந்திருத்தல் vs அசைவுகள்
ஆய்வின்படி, ஒரு பெண்ணின் அன்றாட அட்டவணை இப்படி இருந்தால் ரத்த அழுத்த அபாயம் மிகக் குறைவாக இருக்கிறது என ஆய்வு சொல்வதை பார்க்கலாம். சுமார் 6 மணிநேரம் அமர்ந்திருப்பது, 8 மணிநேரம் லேசான உடல் உழைப்பு (வீட்டு வேலைகள், நிற்பது) 10 மணிநேரம் ஓய்வு அல்லது உறக்கம், யாரெல்லாம் 10 மணி நேரத்திற்கு மேல் அமர்ந்து, 5 மணி நேரத்திற்கும் குறைவாக செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு ஆபத்து அதிகம் என்கிறது ஆய்வு.
எச்சரிக்கையாக இருப்பது எப்படி?
30 முதல் 60 நிமிடங்களுக்கு ஒருமுறை அமர்ந்த இடத்திலிருந்து எழுந்து 5 நிமிடம் நடங்கள் அல்லது நில்லுங்கள்.
துணி மடிப்பது, லேசான சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை செய்வது நல்லது.
தொலைபேசியில் பேசும்போது அல்லது காய்கறி நறுக்கும்போது அமராமல் நின்று கொண்டே செய்யலாம்.
சாப்பிட்டு முடித்ததும் 5 முதல் 10 நிமிடங்கள் மெதுவாக வீட்டுக்குள்ளேயே நடக்கலாம்.
கணினியில் வேலை செய்பவர்கள் நின்றுகொண்டே வேலை செய்யக்கூடிய ‘Standing desk’ வசதியை பயன்படுத்தலாம் என்கிறது ஆய்வு.

