நம்முடைய உடம்பில் இருக்கும் எலும்புகள் வலுப்பெற, மூட்டு வலி வராமல் இருக்க நம்முடைய உணவில் இந்த முடக்கத்தான் கீரையை சேர்த்துக் கொள்வது மிக மிக அவசியம்.
பாரம்பரியமாக நம்முடைய பாட்டி, நம்முடைய அம்மா செய்து வந்த சமையலை இப்போது நாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகின்றோம். அந்த வரிசையில் இந்த முடக்கத்தான் கீரையும் ஒன்று.
இந்த பகுதியில் முடக்கத்தான் கீரையில் பொரியல் செய்வதது எப்படி என பார்க்கலாம் வாங்க.
முதலில் ஒரு கட்டு அளவு முடக்கத்தான் கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த கீரை அப்படியே இருக்கட்டும். அடுத்தபடியாக இரண்டு கைப்பிடி அளவு தேங்காய் துருவலையும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு – 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன், வரமிளகாய் – 2 சேர்த்து தாளிக்க வேண்டும்.
நாம் இதில் சேர்த்த பருப்புகள் அனைத்தும் பொன்னிறமாக வந்தவுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 10 பல், தோல் உரித்த பூண்டு பல் – 10 பொடியாக நறுக்கியது, இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்தபடியாக தயாராக எடுத்து வைத்திருக்கும் முடக்கத்தான் கீரையை கடாயில் போட்டு இரண்டு நிமிடம் போல வதக்கினால் கீரை அனைத்தும் சுருங்கி வரும்.
அப்போது கீரைக்கு தேவையான அளவு உப்பு தூளை தூவினால், கீரையில் இருந்து லேசாக தண்ணீர் விடும். கூடவே நீங்கள் லேசாக தண்ணீர் தெளித்து இந்த கீரையை இரண்டு நிமிடம் போல வேகவைத்துக் கொள்ளுங்கள்.
தண்ணீர் அனைத்தும் சுண்டி வரும்போது தேங்காய் துருவலை சேர்த்து மீண்டும் 2 நிமிடம் போல அடுப்பை சிம்மில் வைத்து சிவக்க விட்டு இறக்கினால் முடக்கத்தான் கீரை பொரியல் தயார்.