வயிற்றுகோளாறு என்பது ஒரு வலியை மட்டும் குறிப்பது இல்லை. வயிறு வலி, மேல் வயிறு, அடிவயிறு வலி, வயிற்றில் வாயு பிரியாமல் உப்புசமாகி இருப்பது என்று பல விஷயங்களையும் கொண்டிருக்கிறது.
அதனால் தான் கைவைத்தியம் செய்யும் போது வலி எப்படி எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கேட்டு அதன்படி வைத்தியம் செய்வார்கள் வீட்டு பெரியவர்கள்.
பெரும்பாலும் உடல் கோளாறுகள் அனைத்துமே கைவைத்தியத்திலேயே சரியாகிவிடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஆரோக்கிய குறைபாடு ஏற்பட்டால் முதலில் வீட்டு வைத்தியம் மூலம் முதல் சிகிச்சை அளிக்கப்படும்.
பாட்டி வைத்தியத்தால் வயிற்று கோளாறுகளை எவ்வாறு சரி செய்வது என்று பார்க்கலாம்.
வெந்தயம் :
வெந்தயத்தை சுத்தம் செய்து ஒரு டீஸ்பூன் நெய் விட்டு பொடிக்கவும். ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் அளவு வெந்தயப்பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து பருகவும்.
குளுமை என்று நினைப்பவர்கள் மோரை தாளித்தும் பயன்படுத்தலாம். தினம் ஒரு டம்ளர் அளவு குடித்தால் கடுமையான வயிறுவலியும் குறையக்கூடும்.
ஓமம் :
வயிறு பொருமலாக இருந்தால் வயிற்றுக்குள் ஒருவித அசெளகரியத்தை உணர்வோம். அப்படி இருந்தால் நீரை கொதிக்க வைத்து 3 டீஸ்பூன் ஓமத்தை சேர்த்து ஆறவிடவேண்டும். தினமும் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக இந்த நீரை குடித்துவந்தால் போதுமானது.
புழுங்கலரிசி சாதம் வடித்த கஞ்சியில் சிறிது உப்பு ,சிட்டிகை பெருங்காயம் சேர்த்து குடித்துவந்தால் பொருமல் பட்டென்று நிக்கும். குழந்தைகளாக இருந்தால் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து கொடுக்கலாம்.
வசம்பு :
ஓமம் சற்று காரத்தன்மையை கொண்டிருக்கும் என்பதால் வளரும் பிள்ளைகளுக்கு கொடுக்கும் போது ஓமத்துடன் சற்று சீரகம் கலந்து கொடுக்கலாம்.
மேலும் பிள்ளை வளர்த்தி என்னும் வசம்பை சுட்டு விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் சம அளவு கலந்து அதில் குழைத்து வயிற்றின் மீது தொப்புளைச்சுற்றி பற்று போட்டாலும் வயிறு பொருமல் நீங்கும்.
வயிற்று உப்புசம் :
சாப்பிட்டால் தான் என்றில்லாமல் எப்போதும் வயிறு உப்புசமாக இருக்கும். வயிற்றுக்குள் கல் வைத்தது போன்று கனமாக உணர்வோம். தண்ணீர் அருமருந்து என்று சொல்வார்கள்.
காலை வேளையில் ஒரு டம்ளர் நீரை அரை டம்ளர் அளவுக்கு வரும் வரை சுண்டக்காய்ச்சி அதில் சிட்டிகை பெருங்காயம் அளவு சேர்த்து பொறுமையாக உமிழ்நீரோடு கலந்து குடிக்க வேண்டும்.
காரம், மசாலா, எண்ணெய் உணவுகளை தவிர்த்து இஞ்சி, பெருங்காயம் சேர்த்து தாளித்த மோர் சாதத்தை உட்கொள்ள வேண்டும்.
இரவு நேரங்களிலும் ஆவியில் வேகவைத்த உணவை எடுத்துகொள்ள வேண்டும். நாள் முழுவதும் வெதுவெதுப்பான நீரை குடித்து வர வேண்டும்.
குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்க வேண்டும். இப்படி செய்தால் ஒரே நாளில் நல்ல பலன் தெரியும்.
வாயு கோளாறு :
உடலில் வாய்வு சேராமல் பார்த்துகொள்ள வேண்டும். இல்லையெனில் மூட்டுவலியும், மலச்சிக்கலும், செரிமானகோளாறும் என படிப்படியாக உருவாகும். புளியேப்பம் கூட வாய்வுக்கோளாறு அறிகுறிகளில் ஒன்றாகவும் சொல்லலாம்.
காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நீர் குடிக்க வேண்டும். பூ வாழைப்பழம் வாங்கி நான்கு அல்லது ஐந்து துண்டுகளாக நறுக்கவும். பெருங்காயத்தை மிளகு உருண்டை சைஸில் உருட்டி கொள்ளவும்.
பெருங்காயம் :
ஒவ்வொரு வாழைப்பழத்துண்டுகளுக்கு நடுவில் பெருங்காயத்தை வைத்து அழுத்தி வாயில் போட்டு அப்படியே விழுங்க வேண்டும். தினமும் காலையில் ஒரு பழத்தை சாப்பிட்டாலே போதுமானது.
தொடர்ந்து மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை சாப்பிட்டால் உடலில் இருக்கும் வாயு கலைந்து வெளியேறிவிடும். அதிகப்படியான வாய்வு கோளாறை உணர்ந்தால் வேப்பம் பூவை உலர்த்தி வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
வயிற்று புண் :
வயிற்றில் புண் இருந்தால் அதன் அறிகுறி வாயில் தெரியும். இதை அறிகுறியாக கொண்டு அல்சர் வரை தடுத்துவிடுவார்கள் பாட்டிமார்கள்.
வாய்ப்புண் வயிற்றுப்புண் இரண்டுக்கும் தேங்காய்ப்பால் சிறந்த நிவாரணம். தினமும் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலை காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
வயிற்று புண்ணை குணப்படுத்தும் கீரைகள் :
அரிசி கழுவிய நீரில் மணத்தக்காளி கீரை அல்லது அகத்திக்கீரையை சுத்தம் செய்து சேர்த்து வேக விடவேண்டும்.
அதை நல்லெண்ணெய், கொப்பரைத்தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் குடல் புண் வரை ஆற்றும்.
குடல் புண் என்னும் அல்சருக்கு துவர்ப்புசுவையுள்ள உணவுகளும் கைகொடுக்கும். வாழைப்பூவை அவ்வபோது உடலில் சேர்த்து வந்தால் அல்சர் நோய் வராமல் தவிர்க்கலாம்.