தற்போது அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய மிகவும் பிரபலமான மற்றும் பலரும் விரும்பி சாப்பிடும் பழம் தான் ஆப்பிள். ஆப்பிளில் பல வெரைட்டிகள் உள்ளன. அனைத்து வகையான ஆப்பிள்களும் ஒரே சத்துக்களைத் தான் கொண்டுள்ளது.
ஒருவர் தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. அந்த அளவில் ஆப்பிளில் ஏராளமான சக்தி வாய்ந்த உட்பொருட்கள் அடங்கியுள்ளன.
அதில் ப்ளேவோனாய்டு, பாலிஃபீனால்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், பொட்டாசியம், பாஸ்பர், கால்சியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
ஆப்பிளை எப்போது சாப்பிட்டாலும், அதன் நன்மைகள் கிடைக்கும். பொதுவாக இரவில் தூங்கும் முன்பு எதையேனும் சாப்பிட்டால், அது தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தி, நாள் முழுவதும் விழித்திருக்க செய்துவிடும்.
இம்மாதிரியான நிலைமை காரமான, கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொண்டால் தான். அப்படியெனில் ஆப்பிளை சாப்பிடுவது நல்லதா என்றால், நிச்சயம் ஆப்பிள் இரவு நேரத்தில் சாப்பிட ஏற்ற ஒரு அற்புதமான உணவுப் பொருள்.
இதில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் நல்ல கனவைப் பெற உதவும் கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாகவும், சிறிதளவு கொழுப்பு கூட இல்லை. ஆகவே இரவில் உங்களுக்கு திடீரென்று பசி எடுத்தால், ஆப்பிள் சாப்பிடுவது மிகவும் நல்லது.
இப்போது ஆப்பிளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும், இரவில் சாப்பிட்டால் பெறும் நன்மைகளையும் காண்போம்.
செரிமானம் மேம்படும் :
ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து, ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவும். ஆப்பிளை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், குடலியக்கம் சிறப்பாக நடைபெற்று, மலச்சிக்கல் மற்றும் இதர வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள் கழிவுகளை எளிதில் மலக்குடல் வழியாக வெளியேற்றும். எனவே உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள்.
புற்றுநோயைத் தடுக்கும் :
ஆப்பிள் புற்றுநோயைத் தடுக்கும். குறிப்பாக ஆப்பிள் மார்பக புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் போன்றவற்றின் அபாயத்தைத் தடுக்கும். உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாது என்று நினைத்தால், தினமும் ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிடுங்கள். ஏனெனில் தோலில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
குடல் ஆரோக்கியம் மேம்படும் :
நம் உடலிலேயே நல்ல பாக்டீரியாக்கள் வாழும் பகுதி என்றால் அது குடலில் தான். ஆப்பிள் நமது பெருங்குடலில் வாழும் நல்ல பாக்டீரியாக்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.
ஆப்பிள் உடலில் மெட்டபாலிசத்தை தூண்டுவதோடு, பாக்டீரியாக்களை சமநிலையில் பராமரித்து, உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை அதிகம் உறிஞ்ச செய்து, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றும்.
இரத்த சோகையை சரிசெய்யும் :
ஆப்பிள் இரத்த சோகையை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இரத்த சோகை என்பது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதாகும்.
இதனை இரும்புச்சத்து உள்ள உணவுகளைக் கொண்டு தான் சரிசெய்ய முடியும். இரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிப்பதன் மூலம், இரத்த சோகையைத் தடுப்பதுடன், உறுப்புக்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைத்து, உறுப்புக்களும் நன்கு செயல்படும்.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் :
சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆப்பிளில் உள்ள பாலிஃபீனால்கள், உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுக்களை உடல் உறிஞ்சுவதைக் குறைக்கும்.
இதனால் இரத்த சர்க்கரை அளவில் ஏற்றஇறக்கம் ஏற்படுவது குறையும். ஆப்பிளில் இருக்கும் பாலிஃபீனால்கள், க்ளுக்கோஸ் உறிஞ்சுவதையும் குறைக்கும் மற்றும் கணையத்தில் இருந்து இன்சுலின் வெளியீட்டையும் தூண்டிவிட்டு, இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்கும்.
இதய நோய்களைத் தடுக்கும் :
ஆப்பிள் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய நோயை எதிர்த்துப் போராடும் வலிமையை உடலுக்கு அளிக்கும். இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டியது அவசியம்.
ஆப்பிளின் தோலில் உள்ள சக்தி வாய்ந்த ப்ளேவோனாய்டான க்யூயர்சிடின், இரத்த நாளங்களில் உள்ள அழற்சியைக் குறைக்கும்.