கழுத்தின் இரண்டுப் பக்கங்களின் வழியாகத் தலைக்குச் செல்லும் கழுத்துத் தமனிகள், இதயத்திலிருந்து மூளைக்கு இரத்தத் தைக் கொண்டு செல்கின்றன.
பெரிதாக உள்ள இந்த இரண்டு தமனி இரத்தக் குழாய்களும் படிப்படியாக பல கிளைகளாகப் பிரிந்து நுண்ணிய இரத்தக் குழாய்களாக மாறி, மூளையின் எல்லாத் திசுக்களுக்கும், அவை செயல்படத் தேவையான பிராணவாயுவையும், பிற ஊட்டச் சத்துகளையும் வழங்குகின்றன.
இதனால் மூளையின் அனைத்து பாகங்களும் முறையாகச் செயல்படுகின்றன.
இப்படி மூளைக்குச் செல்லும் இந்த பெரு மற்றும் சிறு இரத்தக் குழாய்களில் இரத்த ஓட்டம் குறையும் போதோ அல்லது தடைபடும் போதோ, மூளையின் திசுக்களுக்குத் தேவையான பிராண வாயுவும், பிற ஊட்டச் சத்துகளும் கிடைப்பது தடைபடுகிறது.
இதனால், அவை செயல் இழக்கத் துவங்குகின்றன. மூளையில் செயல் இழந்த அந்த பகுதியின் தாக்கம், உடல் இயக்கத்தையும் பாதிக்கிறது. இதனால் பக்கவாதம் (Stroke) ஏற்படுகிறது.
“ஸ்ட்ரோக்” என்றால் கிரேக்க மொழியில், “தடைபடுதல்” என்று பொருள். மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுவதால், இப்பாதிப்பை “பக்கவாதம்” என்கிறோம்.
ஏனென்றால், மூளையின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக உடலின் ஒரு பகுதி செயல்படாமல் போகிறது.
பக்கவாதத்தின் வகைகள் :
பக்கவாதத்தை, அது ஏற்படும் விதத்தை வைத்து மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
1.மூளையிலுள்ள இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பின் காரணமாக ஏற்படும் பக்க வாதத்தை “அதிரோஸ்கிளீரோசிஸ்” (Atherosclerosis) என்கிறார்கள்.
2. மூளையிலுள்ள இரத்தக் குழாய்கள் வெடித்து, மூளையின் உட்புறமோஅல்லது வெளிப்புறமோ “இரத்தக் கசிவு” ஏற்பட்டு, “இரத்தத்தேக்கம்” உண்டாவதன் காரணமாக ஏற்படும் பக்க வாதத்தை “இன்ட்ரா செரிப்ரல்ஹெமரேஜ்” (Intracerebral hemorrhage) என்கிறார்கள்.
3. ஒருவருக்கு பலவீனமான அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு இருந்தால், அது இதயத்தில் இரத்த உறை பொருட்களைத் தோற்றுவித்து, அது இரத்த ஓட்டத்தின் மூலம் மூளையிலுள்ள இரத்தக் குழாய்களைச் சென்றடைந்து, அங்கு அடைப்பை உண்டாக்கி பக்க வாதத்தை ஏற்படுத்தும். இதை “திராம்போ எம்பாலிக்” (Thrombo Embolic) என்கிறார்கள்.
80 சதவிகித பக்க வாதம், மூளையிலுள்ள இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாகவே ஏற்படுகிறது.
இது, இரத்தக் குழாயின் உட்பகுதி தடிமனாகுவதாலோ அல்லது கொழுப்பு, கால்சியம், சிகப்பணுக்கள் மற்றும் இரத்த உறை பொருட்கள் போன்றவை இரத்தக் குழாய்களின் உட்சுவர்களில் படிந்து, அதன் குறுக்களவு குறைவதாலோ ஏற்படுகிறது.
20 சதவிகித பக்க வாதம், மூளையில் இரத்தம் கசிந்து தேக்கமடைவதால் ஏற்படுகிறது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்:
1.உயர் இரத்த அழுத்தம் (Hypertension).
2. மூளையிலுள்ள இரத்தக் குழாய்கள் வீக்கமடைவது (Aneurysm).
பக்கவாதத்தை, வேறொரு முறையிலும், மூன்றாக வகைப்படுத்தலாம். இவை, பக்கவாதத்தால் ஏற்படும் பாதிப்பை வைத்து வகைப்படுத்தப்படுகிறது.
தற்காலிக பக்கவாதம் (Transient Ischemic Attack) :
இப்பக்கவாதம் ஒரு சில நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. இதனால் இதை “தற்காலிக பக்க வாதம்” என்று அழைக்கிறார்கள். இப்பக்கவாத பாதிப்புக்கு, இரத்த கசிவு கண்டிப்பாகக் காரணமாகாது.
மூளையிலுள்ள இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பே காரணமாக இருக்கும். இத்தற்காலிக பக்கவாதத்தில், அடைப்பு முழுமையாக ஏற்படாது. திடீரென அரைகுறையாக அடைப்பு ஏற்பட்டுப் பின் உடனேயே அது நீங்கி விடும்.
பெரும்பாலான தற்காலிக பக்கவாதம் சில நிமிடங்களுக்கு மட்டுமே நீடிக்கும். எனவே இந் நோயாளருக்கு சில பாதிப்புகள், சில நிமிடங்கள் வரையே ஏற்பட்டுப் பின், உடனேயே நீங்கிவிடும்.
என்றாலும், இவர்களுக்கு பின்னால் மீண்டும், கடுமையான பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன.
தொடர் பக்கவாதம் (Evolving Stroke) :
இவ்வகை பக்கவாதம், இரத்தக் குழாய்களில் “இரத்த உறை பொருள்” தோன்றுவதாலோ அல்லது “மூளைப் புற்றுக்கட்டி” பாதிப்பினாலோ அல்லது மூளை உறைக்கு அடியில், இரத்தம் கசிந்துப் பின் ஏற்படும் இரத்தத் தேக்கத்தினாலோ ஏற்படலாம்.
இவ்வகை பக்கவாதத்தில், இரத்தக் குழாய் அடைப்போ அல்லது இரத்தக் கசிவோ திடீரென ஏற்படாது. கொஞ்சம் கொஞ்சமாக, நாட்கணக்கில் பாதிப்பு தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கும். இடையில் பாதிப்பு அதிகரித்தோ அல்லது குறைந்தோ காணப்படும்.
முற்றுபெற்ற பக்கவாதம் (Completed Stroke) :
இவ்வகை பக்கவாதத்தில் பாதிப்புகள் ஓரிரு மணி நேரத்திலேயே ஏற்பட்டு விடும். மேலும், இப்பாதிப்புகள் எளிதில் குணப்படுத்த இயலாத வகையில் ஏற்படும். இப்பக்கவாதத்தை, மேலும் இரண்டு வகைகளாக வகைப்படுத்துவர்.
1. சிறிய அளவே பாதிப்பை ஏற்படுத்திய, முற்றுபெற்ற பக்கவாதம் :
இவ்வகை பக்கவாதத்தில், இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகள் சிறிய அளவிலேயே ஏற்படும். எனவே பாதிப்புகளும் சிறிய அளவிலேயே இருக்கும்.
2. பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திய, முற்றுபெற்ற பக்கவாதம் :
இவ்வகை பக்கவாதத்தில் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளோ அல்லது இரத்தக் கசிவோ பெரிய அளவில் ஏற்படும். எனவே பாதிப்புகளும் கடுமையாக இருக்கும்.
பக்கவாதம் ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்கள் :
1. பாரம்பரியம்
2. உயர் இரத்த அழுத்தம்
3.புகைத்தல் மற்றும் புகையிலையை பயன்படுத்துதல்
4. அதிக உடல் எடை மற்றும் உடற்பருமன்
5. நீரிழிவு நோய்
6.இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிதல்
7.தலையில் ஏற்படும் காயங்கள்
8.இதய நோய்கள்
9.சோம்பேறித் தனமான வாழ்க்கை
10.நாட்பட்ட மன அழுத்தம்
11.ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம்
12.நாட்பட்ட நோய்த் தொற்று
பக்க வாதத்தின் அறிகுறிகள் :
1.பொதுவான அறிகுறிகள் :
பக்கவாதம் ஏற்படுவதற்கு முன்பாக சில அறிகுறிகள் தோன்றும். அப்போதே நாம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அப்படிப்பட்ட சில முக்கியமான அறிகுறிகளாவன:
1. உடலின் ஒரு பகுதி அல்லது முகம், கை, கால்களில் மரத்துப் போனது போன்ற உணர்வு.
2. திடீரெனப் பார்வை தெளிவில்லாமல் போவது.
3. நடந்து செல்லும்போது, திடீரென தலைச் சுற்றல், தடுமாற்றம் போன்றவை ஏற்படுவது.
4. திடீர் குழப்பம், பேச்சுக் குழறல், பிறர் பேசுவதைப் புரிந்துக் கொள்ள இயலாமை.
5. கடுமையான திடீர்த் தலைவலி.
6. தான் எங்கிருக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் போவது.
பக்கவாதத்தால் ஏற்படும் உடல் பாதிப்புகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவை, பக்கவாதத்தின் வகையைப் பொருத்தும், அது மூளையின் எந்தப் பகுதியைப் பாதித்திருக்கிறது என்பதைப் பொருத்தும், அது யாரை பாதித்திருக்கிறது என்பதைப் பொருத்தும் நபருக்கு நபர் மாறுபடும்.
பக்கவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டவருக்கு பேச்சுச் சிகிச்சையாளர், உடல் இயக்கச் சிகிச்சையாளர், தொழில் வழி சிகிச்சையாளர், மனநல ஆலோசகர், ஊட்டச்சத்து நிபுணர் ஆகியவர்களின் உதவி பாதிப்புக்குத் தகுந்தாற்போலத் தேவைப்படும்.
இவர்கள் அனைவரும் இணைந்து நோயாளருக்குச் சிகிச்சை மற்றும் பயிற்சி அளிக்கும்போது, நோயாளர் பாதிப்பிலிருந்து வெகுவிரைவில் நலம் பெறுவார்.