ஃபிட்னஸ்

கால்களை பலப்படுத்தும் உத்கடாசனா! – ஆரோக்கியமான வாழ்விற்கான யோகாசன பயிற்சி

வடமொழியில் ‘உத்கடா’ என்றால் ‘தீவிரமான’ மற்றும் ‘பலம் பொருந்திய’ என்று பொருள். உத்கடாசனத்தைப் பயிலும்போது இதன் பொருளை நீங்கள் மேலும் நன்றாக உணர்வீர்கள்.

உத்கடாசனத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம் ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. மூலாதாரம் தூண்டப்படுவதால் மற்ற அனைத்து சக்கரங்களின் செயல்பாடுகள் செழுமையடைகின்றன.

utkatasana

மணிப்பூரக சக்கரமும் இப்பொழுது தூண்டப்படுவதால் தன்னம்பிக்கை வளர்கிறது, ஆளுமை மெருகேறுகிறது, தன்மதிப்பு கூடுகிறது மற்றும் புற சூழல்களின் எதிர்மறைத் தாக்கங்களால் பாதிக்கப்படாமல் தன் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் துணிவையும் வலிமையையும் தருகிறது.

உத்கடாசனத்தின் மேலும் சில பலன்கள் :

நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கிறது

முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது.

நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது

கால்களை நீட்சியடையச் செய்வதோடு பலப்படுத்தவும் செய்கிறது

நுரையீரலைப் பலப்படுத்துகிறது

உடலின் சமநிலையை முன்னேற்றுகிறது

utkatasana pose

இடுப்புப் பகுதியைப் பலப்படுத்துகிறது

வயிற்றில் உள்ள அதிகக் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது

சீரணக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது

மாதவிடாய் வலிகளைப் போக்குகிறது.

மூட்டுகளை நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு மூட்டுகளையும் பலப்படுத்துகிறது.

சையாடிக் பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது.

செய்முறை :

விரிப்பில் நேராக நிற்கவும்.

பாதங்களை அருகருகே வைக்கவும்.

மூச்சை உள்ளிழுத்தவாறு கைகளைப் பக்கவாட்டில் உயர்த்தவும்.

மூச்சை வெளியேற்றவும்.

மூச்சை உள்ளிழுத்தவாறு கைகளை மேலே உயர்த்தி இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக சேர்க்கவும். அதே நேரத்தில் இடுப்பைக் கீழ் நோக்கி இறக்கவும்.

chair pose yoga

கால் முட்டி விலகாமல் குதிகால்களுக்கு அருகே புட்டம் இருக்கும் அளவுக்குக் கீழிறங்கவும். பாதங்களை உயர்த்தக் கூடாது.

20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், எழுந்து கைகளைப் பக்கவாட்டில் கொண்டு வரவும். தொடர் பயிற்சியில் ஒரு நிமிடம் வரை இந்த நிலையில் இருக்கலாம்.

குறிப்பு :

குறைவான இரத்த அழுத்தம், தூக்கமின்மை, தீவிர முதுகுத்தண்டு கோளாறு உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும். இடுப்பு வலி மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் முன்னால் நாற்காலி போன்ற ஒன்றைப் பற்றி முடிந்த அளவுசெய்தால் போதுமானது.

Related posts