தலைமுடி எண்ணெய்ப்பசை இன்றி வறண்டு போகும்போது, உச்சந்தையில் வெடிப்பு ஏற்பட்டு பொடுகு உண்டாகிறது. இதனால் அரிப்பு தோன்றுகிறது. தலை சீவும்போது, இந்த வெடிப்புகள் சிறு சிறு வெள்ளை செதில்களாகி , முதுகிலும், தோளிலும் விழுகிறது.
இவை பொதுவாக வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் காணப்படும். இந்த துகள்கள் எண்ணெய் தன்மை உடையதாக இருந்தால், இவை உச்சந்தலையில் ஒட்டிக் கொள்கிறது.
உச்சந்தலையில் இந்த துகள்கள் ஒட்டிக்கொள்வதால் இதனை ஓட்டும் தன்மை உள்ள பொடுகு என்று அழைக்கிறோம். குளிர் காலங்களில் பொதுவாக தலைமுடி அதிகமாக வறண்டு காணப்படுகிறது.
பொடுகு தொந்தரவு உள்ளவர்களுக்கு முடி உதிர்தல் தொல்லையும் இருக்கும். இவை இரண்டு பிரச்சனைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. பொடுகு ஏற்படப் பல காரணங்கள் உண்டு.
பருவ நிலை மாற்றம், உடலில் ஹார்மோன் மாற்றம், தலையை சரியாக அலசாமல் விடுவது , முடி ஈரமாக இருக்கும்போதே பின்னல் போடுவது, உச்சந்தலையில் சீரற்ற pH அளவு , பொடுகால் பாதிக்கப்பட்டவரின் டவலை பயன்படுத்துவது, அல்லது அவருடன் சேர்ந்து உறங்குவது என்று இன்னும் பல காரணிகள் உள்ளன.
காரணம் எதுவாக இருந்தாலும், அழகான அடர்ந்த கூந்தலைப் பெற பொடுகு இல்லாமல் கூந்தலை பராமரிக்க வேண்டும்.
பொடுகுத்தொல்லையிலிருந்து விடுபட , வீட்டிலேயே எளிமையான முறையில் தயாரித்து பயன்படுத்தக்கூடிய தலைமுடி மாஸ்க் பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
3 ஸ்பூன் மருதாணி பவுடர்
1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்
2 ஸ்பூன் முட்டையின் வெள்ளைக் கரு
தண்ணீர் தேவைக்கேற்ப
செய்முறை :
மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாக கலந்து கட்டியில்லாமல் ஒரு பேஸ்ட் போல் செய்யவும். தடவும் முறை முடியின் வேர்கால்களில் இருந்து நுனி முடி வரை இந்த பேஸ்டை தடவவும்.
அரை மணி நேரம் இந்த பேஸ்ட் உங்கள் முடியில் இருக்கட்டும். பின்பு மிதமான ஷம்பூவால் தலையை அலசவும்.
இதன் பிறகு வறண்ட தலைமுடி என்றால் தேவைப்பட்டால் கண்டிஷனர் பயன்படுத்தவும் . இல்லையென்றால் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டாம். முட்டையும் மருதாணியும் ஒரு சிறந்த கண்டிஷனர் ஆகும்.
குறிப்பு :
தலை முடியில் எண்ணெய் தடவி இருந்தால் இந்த பேக்கை பயன்படுத்த வேண்டாம். எண்ணெய் தடவிய முடியில், இந்த மருதாணி பேக் பொடுகைப் போக்க பயன்படாது.
பொடுகின் தீவிரத்தைப் பொறுத்து பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இதனைப் பின்பற்றலாம். மருதாணி , தலைமுடியின் வறட்சியை அதிகரிக்கலாம். ஆகவே இதனை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
மேலே கூறிய முறைப்படி இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் பொடுகு தொல்லை விரைவில் காணாமல் போகும்.
இந்த தலைமுடி மாஸ்கின் பயன்கள் :
இந்த பேக் பொடுகை எதிர்த்து போராடுவதுடன், சேதமடைந்த முடிகளுக்கு மறுவாழ்வைத் தருகின்றது . உச்சந்தலையின் pH அளவை மீட்க உதவுகின்றது.
உங்கள் கூந்தலுக்கு ஆரோக்கியத்தைத் தருகின்றது. அடர்த்தியான மற்றும் பளபளப்பான முடியைத் தருகின்றது. இது சிறந்த கண்டிஷனராகவும் செயல்படுகிறது.
இதில் பயன்படுத்தப்படும் முட்டை, உச்சந்தலையில் உண்டாகும் செதில்களைப் போக்க உதவுகின்றது. ஆகவே பொடுகு எளிதில் மறைகிறது. ஆலிவ் எண்ணெய் பொடுகைக் குறைக்கிறது, முடி வறட்சியைக் குறைக்கிறது இதன்மூலம் முடியின் வேர்க்கால்கள் வலிமை அடைந்து வளர்ச்சி அதிகரிக்கிறது.
பொடுகைப் போக்க :
பொடுகு பாதிப்பு அதிகமாக இருந்தால், தினமும் தலைக்கு பயன்படுத்தும் சீப்பு மற்றும் பிரஷ் போன்றவற்றை கழுவுங்கள், தலையணை உறைகளை தினமும் மாற்றுங்கள். இவற்றை கழுவும்போது கிருமிநாசினிகளை பயன்படுத்திக் கழுவுங்கள்.
பழங்கள், சாலட், முளை விட்ட தானியங்கள் போன்றவற்றைக் கொண்ட ஒரு ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுங்கள்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின், பயோடின் போன்ற மினரல் அதிகம் உள்ள உணவை உண்ணுங்கள்.
இதனால் தலை முடி பாதுகாக்கப்பட்டு ஆரோக்கியமாக வளர்கிறது, மேலும் பொடுகு குறைகிறது. தினமும் ஆறு முதல் எட்டு கிளாஸ் அளவு தண்ணீர் குடியுங்கள். சில எளிய உடற் பயிற்சிகளை செய்யுங்கள்.