கொரோனா வைரஸ் பரவலே இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. இந்த நிலையில் கேரளாவில் உள்ள சிலருக்கு தக்காளி காய்ச்சல் என்ற புதியவகை காய்ச்சல் பரவிக்கொண்டிருக்கிறது.
கொரோனா பரவல்
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவி வந்த கொரோனா வைரஸ் 2020 ஆம் ஆண்டு உலகெங்கிலும் பரவ தொடங்கியது. ஊரடங்கு கட்டுப்பாடு , கட்டாயம் முகக்கவசம் அணிதல், உறவுகளை இழத்தல் என பல இடர்களை உலகம் சந்தித்து வந்திருந்தது. தற்போதுதான் இந்த கொரோனா வைரஸ் ஓரளவு மெல்ல மெல்ல கட்டுக்குள் வந்துள்ளது. இந்த பயமே இன்னும் நீங்காத நிலையில் தற்போது தக்காளி காய்ச்சல் என்ற புதிய வைரஸ் காய்ச்சல் கேரளாவில் பரவி வருகிறது.
தக்காளி காய்ச்சல்
கேரள மாநிலம் கொல்லம், ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்துர் ஆகிய பகுதிகளில் இந்த புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பெருபாலானோர் 5 வயதிற்குட்பட்ட குழைந்தைகளே ஆவர். இந்த வைரசால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு காய்ச்சல், உடல்வலி, கை கால் வெளிர் நிறமாதல் போன்ற பல அறிகுறிகள் இருப்பதாகவும் வெயில் காலத்தில் பரவும் அம்மை நோய் போன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் தக்காளி காய்ச்சல் அச்சம்
பாதிக்கப்பட்ட இடங்களில் அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கிராமங்களிலும் அதிகாரிகள் இந்த காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 82 பேர் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் இந்த நோய் பரவக்கூடுமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது. ஆனால், தமிழகத்தில் தக்காளி காய்ச்சல் குறித்த அறிகுறிகள் எதுவும் இல்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அறிகுறிகள்
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு தக்காளி அளவில் கொப்பளங்கள் இருக்கும், தோல் எரிச்சல் ஏற்படும் மற்றும் நாக்கில் நீரிழப்பு ஏற்படும். சில நோயாளிகள் தங்கள் உடலில் ஏற்படும் கொப்பளங்களில் இருந்து புழுக்கள் வெளிதேறுவதாக கூறினார். அதிக காய்ச்சல், உடல் வலி, மூட்டு வீக்கம், சோர்வு, தக்காளி அளவில் கொப்பளம், வாய் எரிச்சல் ஆகியவை இந்த தக்காளி காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாக உள்ளன.
தடுப்பு நடவடிக்கைகள்
குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் அறிகுறிகள் ஏதேனும் இருக்குமாயின் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு அணுக வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக திரவத்தை உட்கொள்ளுதல் நல்லது. சொறிந்துவிட கூடாது. பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து இடைவேளையை பின்பற்ற வேண்டும். நோயாளி மற்றும் நோயாளியை சுற்றியுள்ளவர்கள் தூய்மையை பின்பற்றுவது அவசியம். காய்ச்சல் ஒருவாரம் வரை நீடிக்கும் என்பதால் ஒய்வு எடுப்பது மிக அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.