தமிழ்நாடு

கால அவகாசம் கொடுக்காமல் இடிக்கப்பட்ட வீடுகள்; முதியவர் தீக்குளித்ததால் பரபரப்பு !

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் சுமார் 300 வீடுகள் பட்டா இல்லாமல் ஆக்கிரமிப்பு இடங்களில் கட்டுப்பட்டுள்ளதாக தொடுத்த வழக்கையொட்டி அந்த வீடுகளை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பொதுநல வழக்கு

சென்னை, கிரீன்வேஸ் சாலை பங்கிஹ்காம் கால்வாயை ஒட்டிய இளங்கோநகரில் சுமார் 259 வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக அப்பகுதியை சேர்ந்த ஒரு நபர் பொதுநல வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் விசாரணையின் கீழ் வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள வீடுகளை இடிக்க உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கடந்த 29 ஆம் தேதி வீடுகளை இடிக்க பொதுப்பணி துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

நோட்டீஸ் வாங்க மறுப்பு

நோட்டீஸை வாங்க மறுத்த அப்பகுதி பொதுமக்கள் இது தொடர்பாக முதலமைச்சர் தனி பிரிவுக்கு மனுக்களை அனுப்பினார். ஆனாலும் இளங்கோ நகர் பகுதியில் உள்ள வீடுகள் படிப்படியாக இடிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 29 தேதி வீடுகளை இடிக்கும் பணி தொடங்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மண்னென்னை கேனுடன் நின்று தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்தனர். எனவே, அந்த பகுதியில் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நோட்டீஸை வாங்க மறுத்த வீடுகளில் நோட்டிஸ் ஒட்டும் பணியும் தீவிரமானது.

முதியவர் தீக்குளிப்பு

’60 வருடமாக நாங்கள் இங்குதான் வசிக்கிறோம். எந்த கால அவகாசமும் கொடுக்காமல் எங்கள் வீடுகளை இடித்தால் நாங்கள் எங்கு செல்வோம்’ என்று அப்பகுதி மக்கள் கதறி அழுத போதிலும் வீடுகளை இடிக்கும் பணி தொடர்ந்தது. அதிகாரிகள் கொஞ்சம் கூட தங்களுடைய கருத்தை உள்வாங்காததால் அப்பகுதியை சேர்ந்த கண்ணையா(55) என்ற நபர் உடல் முழுவதும் மண்னென்னையை ஊற்றிக்கொண்டு தீ குளித்தார். உடல் முழுவதும எரிந்த நிலையில் இருந்த அந்த நபரை அப்பகுதி மக்கள் மருத்துவ அவசர வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.ஆனால் கண்ணையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதிகாரிகளின் பதில்

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளோ ‘நீதிமன்ற உத்தரவின் படியே வீடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதி மக்களுக்கு வேறு பகுதியில் இடங்களை ஒதுக்கியும் அங்கு செல்வதற்கு இவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இவர்களது வாழ்வாதாரத்திற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்கிறார்கள்.