மருத்துவம்

நாம் உண்ணும் உணவு எவ்வாறு செரிமானம் ஆகிறது?

நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள பல்வேறு சத்துக்கள் எவ்வாறு செரிமானம் ஆகின்றன என்பதை பற்றி பார்ப்போம்

மாவுச்சத்து :

மாவு உணவும் சர்க்கரையுமான கார்போஹைடிரேட் முதலில் வாயிலே கரைந்து, பிறகு சிறுகுடலிலே எளிய சர்க்கரையாக, முக்கியமாக குளுகோஸாக மாறுகிறது.

சிறுகுடலின் உட்சுவரிருள்ள உறிஞ்சுகளின் வழியே குளுக்கோஸ் நேரே இரத்தத்தை அடைகிறது.

இவ்வாறு அது உடலெங்கும் பயணமாகிறது. இதில் பெரும் பகுதியைத் தசைகள் தமது இயக்கத்துக்கு ஓர் எரிப்பொருளாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

குளுகோஸின் ஒரு சிறு பகுதிகளை கோஜெனாக மாற்றப்படுகிறது.

இந்த வடிவத்தில் தான் குளுகோஸ் தசைகளிலும் (ஒன்றிலிரண்டு பகுதி) கல்லீரலும் (மூன்றிலொரு பகுதி) சேமிக்கப்படுகிறது. இரத்தத்தில் எப்போதும் சற்று குளுகோஸ் இருக்கும். இதன் அளவு ஒரே சீராக இருக்க வேண்டும்.

இந்த அளவு ஏறினால் எங்கேயோ ஏதோ தவறு இருக்கிறது என்று பொருள். சர்க்கரை நோய் போன்ற நோய்க்கு அடையாளமாகும் இது.

கொழுப்புச்சத்து :

கொழுப்புச் சத்து ஜீரணமாவது எப்படித் தெரியுமா? கொழுப்புச் சத்து, கிளிசரால், கொழுப்பு அமிலம் என்னும் இரண்டு பொருள்களால் ஆனது. இந்தச் சத்து உடலிலே கரைவதற்காக ஜீரண உறுப்புகள் கொழுப்புச்சத்தை இந்த இரண்டு பொருள்களாகத் தனித்தனியே பிரிக்கின்றன.

கொழுப்பு அமிலத்தின் ஒரு பகுதியும் கிளிசராலும் நேராக இரத்தத்திலே கலந்து கல்லீரலுக்குச் செல்கின்றன. இங்கே கொழுப்பு அமிலம் சக்தி தயாரிக்கப் பயன்படுகிறது.

இதன் ஒரு பகுதி இரத்தத்தின் வழியாகவே உடலின் வேறு தேவையான உறுப்புகளுக்கு, எந்த வடிவத்தில் தேவையோ அந்த வடிவத்தில் மாற்றி அனுப்பப்படுகிறது.

அந்த உறுப்புக்களில் இவை சக்தி தயாரிக்கவும் பயன்படும் அல்லது மீண்டும் கொழுப்புச்சத்தாக மாற்றப்பட்டு கொழுப்பான திசுக்களுக்கு வளம் ஊட்டப் பயன்படும்.

இரத்தத்தின் வழியே அல்லாமல் நிணநீர் நாளங்களினாலே சிறிது கொழுப்புச் சத்து நேரே உறிஞ்சப்படுகிறது என்றும் பார்த்தோம்.

அவையும் இறுதியில் இரத்தத்திலே வந்துதான் கலக்கின்றன. இந்தக் கொழுப்புப் பொருள்கள் உடலின் பல்வேறு திசுக்களில் உள்ள ஓர் என்ஸைமினால் கொழுப்பு அமிலங்களாகத் தகர்க்கப்படுகின்றன.

தேவைக்கு மேல் மிகையாக நாம் உண்பதெல்லாம் பெரும்பாலும் உடலின் கொழுப்பாக மாற்றப்பட்டுச் சேகரமாகின்றன.

நமக்குப் போதுமான உணவு கிடைக்காதபோதோ, பட்டினி கிடக்கும் போதோ, இந்தக் கொழுப்புச் சேமிப்பே உடலுக்கு உதவுகிறது.

புரதச்சத்து :

புரதச்சத்து இறுதியாக இரத்தத்தில் கலக்கும்போது அமினோ அமிலங்களாக மாறியே கலக்கிறது. இந்த அமிலங்களே இதன் ஆதாரப் பொருள். கட்டிடம் கட்ட எப்படி கல் ஆதாரமோ அப்படி உடல் வளர்ச்சிக்கு இவை ஆதாரம்.

உடல் என்னும் பரந்த நிலத்தில் வெவ்வேறு பகுதிகளில் ஏதாவது கட்டிட வேலை நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அங்கெல்லாம் இந்த அமினோ அமிலங்கள் விரைந்து உதவும் திசுக்களுக்கான புரோட்டீன், என்ஸைம்கள், ஹார்மோன் என்றும் ஊட்டச் சத்துக்கள், மற்றும் பல இரசாயனக் கலவைகள் எல்லாம் இயற்கையான புரதங்கள்.

இது தவிர கல்லீரல் என்னும் இரசாயன சாலையில் உடலுக்கான புரதம் தயாராகிறது, சேமிக்கப்படுகிறது, சிறிய சிறிய அளவுகளில் இரத்தத்திற்கு வழங்கப் படுகிறது. தேவைக்கு மிகுதியான புரதத்தை கல்லீரல் வேறு எளிய பொருளாக மாற்றி; உடலின் வேறு தேவைகளுக்கு வழங்குகிறது.

பல கனிச்சத்துக்களும் வைட்டமின்களும் கூடக் கல்லீரலில் தான் சேமிக்கப்படுகின்றன.

எப்போதெல்லாம் தேவையோ, அப்போதெல்லாம் இவை உடலின் வேறு வேறு இயக்கங்களுக்கு அனுப்பப்படுகின்றன. ஒன்றுக்கொன்று தொடர்புடைய இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான இயக்கங்கள் ஒன்று சேர்ந்தால் உயிரியக்கம் ஆகிறது.

Related posts