காதலிக்க மறுத்ததால் 19 வயது இளம்பெண்ணை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவி
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சிவயல் புதூரை சேர்ந்தவர் வித்யாலட்சுமி. 19 வயதான இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். துவாக்குடியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி படித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே ஒரு இளைஞர் காதலிப்பதாக கூறி மாணவி வித்யாலட்சுமியை பின்தொடர்ந்து இருக்கிறார்.
ஒருதலை காதல்
இந்நிலையில், கடந்த 11ம் தேதி அந்த இளைஞர் வித்யாலட்சுமியிடம் சென்று தன் காதலை சொல்லியிருக்கிறார். ஆனால் மாணவி காதலை நிராகரித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அந்த இளைஞர் தொடர்ந்து மாணவியை தொந்தரவு செய்திருக்கிறார். ஒருக்கட்டத்தில் வித்யாலட்சுமி செய்வதறியாமல் அந்த இளைஞரை செருப்பால் அடித்ததாக சொல்லப்படுகிறது.
விஷம் கலந்த குளிர்பானம்
இதனையடுத்து கடந்த 12ம் தேதி கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய வித்யாலட்சுமி தனது தாத்தா வீட்டிற்கு செல்வதற்காக துவாக்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தனது இரு நண்பர்களுடன் அங்கு வந்த இளைஞர் மாணவியை வழிமறித்து விஷம் கலந்த குளிர்பானத்தை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதி
இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி வித்யாலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே வித்யாலட்சுமியின் தாயார் பெல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். மேலும், காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மூன்று பேர் விஷம் கலந்த குளிர்பானத்தை கட்டாயப்படுத்தி தன் வாயில் ஊற்றியதாக அந்த மாணவி வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
உயிரிழப்பு
இதனையடுத்து தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அந்த மாணவியின் உறவினர்கள், சம்மந்தப்பட்ட அந்த மூன்று பேரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடியடி
உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனையடுத்து, மாணவியின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை மேற்கொண்டு மாணவியின் மரணம் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வோம் என்று உறுதியளித்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.