மணப்பாறையில் சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சொந்த அண்ணனை குத்தி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குணசீலன் குடும்பத்தினர்
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை ஊரில் கோவிந்தராஜபுரத்தை சேர்ந்தவர் குணசீலன். இவருக்கு 7 மகன்கள் உள்ளனர். இதில் 4வது மகன் லெட்சுமிநாராயணன். 31 வயதான இவர் கார் ஓட்டுனராக உள்ளார். இவர் சொந்தமாக டிராவல்ஸ் வைத்து நடத்தி வந்தார். கடந்த 2ம் தேதி காலை வீட்டில் லெட்சுமிநாராயணன் உடலில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
உயிரிழப்பு
இதைப்பார்த்து அதிர்ந்து போன அவரது சகோதரர் சீனிவாசன் உடனே மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரத்தின் உயிர் ஏற்கனவே பிரிந்து விட்டதாக தெரிவித்துவிட்டனர். வீட்டில் லட்சுமிநாராயணன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தடயவியல் நிபுணர்கள்
மேலும், தடயங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று கண்டறிய சம்பவ இடத்தில் நிபுணர்கள் ஆய்வில் ஈடுப்பட்டனர். மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும், மணப்பாறை போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
விசாரணை
இந்நிலையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையில் இறந்தவரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இறந்தவரின் சகோதரரான ஜானகி ராமன் என்பவரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் லட்சுமிநாராயணனை, அவர்தான் கொலை செய்துள்ளார் என்று தெரியவந்தது.
குடும்ப தகராறு
மேலும், குடும்ப செலவுக்கும் ஜானகிராமன் பணம் தருவதில்லை இதனால் ஜானகிராமனை லட்சுமிநாராயணன் கண்டித்துள்ளார். குடும்ப வரவு செலவு கணக்கு காரணமாக லட்சுமிநாராயணன், ஜானகிராமன் இருவருக்கும் கடந்த ஒரு மாதமாக பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதன்தொடர்ச்சியாக கடந்த 1ம் தேதி இரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கொலை
அதன்பிறகு நள்ளிரவு லட்சுமி நாராயணன் அறைக்குள் தூங்கி கொண்டிருந்தார். கடுமையான ஆத்திரத்தில் இருந்த தம்பி ஜானகிராமன் தூங்கிக் கொண்டிருந்த லட்சுமிநாராயணன் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். அதனையடுத்து யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து தப்பித்து சென்றது காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், ஜானகிராமன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சொந்த அண்ணனை தம்பியே குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.