கோடை கால வெயில் காரணமாக பலரும் உடல் உஷ்ணத்தால் பல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இது போன்ற நபர்கள் இயற்கையான முறையில் தங்கள் உடல் உஷ்ணத்தை குறைத்துக் கொள்ள சில டிப்ஸ் இதோ..!
இரவு படுக்கச் செல்லும் போது, உள்ளங்காலில் சிறிது நல்லெண்ணெய் தேய்த்துவிட்டு படுப்பது உடல் சூட்டை தணிக்கும்.
கோடை காலத்தில் பலருக்கும் செரிமான பிரச்சனைகள் இருக்கும். இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனாலும் கூட உடற் சூடு அதிகரிக்கும். எனவே திரிபலா லேகியம் போன்ற இயற்கை மலமிளக்கிகளை எடுத்துக் கொள்வது நல்லது.
நெல்லிக்காய் குளிர்ச்சியை தரக்கூடியது. எனவே கோடை காலங்களில் தினசரி நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது. நெல்லிக்காய் சாற்றை தினமும் குடித்து வந்தால் உடல் சூடு குறையும்.
தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது, உடற் சூட்டை குறைக்க மிகச்சிறந்த வழியாகும். நல்லெண்ணெய் இல்லாவிட்டாலும், தினமும் தேங்காய் எண்ணையை தலையில் தேய்த்து குளிப்பது நல்லது.
தயிரை விட மோர் உடற்சூட்டை குறைப்பதில் சிறப்பாக செயல்படும். எனவே மதிய உணவில் மோரை சேர்த்துக் கொள்வது அவசியம். மதியம் உணவில் மோர் கலந்த சாதத்தில் இரண்டு மூன்று சிறு வெங்காயத்தை சேர்த்து, மூன்று நாட்களுக்கு சாப்பிடவும்.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு பயன்படுத்தும் நல்லெண்ணெயை.காய்ச்சி மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வெந்நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இளநீர் உடல் உஷ்ணத்தை குறைப்பது சிறந்தது.
ஆட்டுப்பாலை தினமும் பருகி வந்தால் உடல் சூட்டை விரைவாக குறைத்து விடலாம்.
பரங்கிக்காயில் பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவை ஏராளமாக உள்ளது. இதனை கோடையில் உட்கொண்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். மேலும் உடல் வெப்பமும் குறையும்.
இரவு சிறிது அளவு பாதாம் பிசின்னை தண்ணீரில் ஊறவைத்துக், மறுநாள் காலையில் பருக வேண்டும், உடல் சூடு தணியும் வரை எடுத்துக்கொள்ளவும்.
ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் ஒரு இரவு ஊற வைக்கவும். மறு நாள் காலையில் வெறும் வயிற்றில் இதை உட்கொள்ளவும். இதை இரண்டு நாட்களுக்கு செய்யவும்.
முக்கியமாக கோடையில் மற்ற காலங்களில் குடிக்கும் நீரின் அளவை விட அதிகமான அளவில் தண்ணீரைப் பருக வேண்டும். இதனால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.