மத்ஸ்யாசனம் பின்னால் வளைந்த நிலையில் செய்யப்படுகிறது; இவ்வாசனத்தில் முதுகும் பின்புற வளைவு பெறுகிறது. வடமொழியில் ‘மத்ஸ்ய’ என்றால் ‘மீன்’ என்று பொருள். மத்ஸ்யாசனத்தில் உடல் மீன் நிலை போல் இருப்பதால் இப்பெயர் பெற்றது. இது ஆங்கிலத்தில் Fish Pose என்று அழைக்கப்படுகிறது.
மத்ஸ்யாசனம் செய்வதால் அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, குரு மற்றும் சஹஸ்ரார சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. அன்பு மற்றும் பரிவு ஆகிய தன்மைகளை வளர்க்கிறது; ஞானம் அடைவதற்கான நிலையை இவ்வாசனம் அளிக்கிறது. தொடர்பாடல் திறன் மேம்படுகிறது.
மத்ஸ்யாசனத்தின் மேலும் சில பலன்கள் :
முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்வதோடு அதன் நெகிழ்வுத்தன்மையையும் அதிகரிக்கிறது
முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது
நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது
ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகளை சரி செய்கிறது
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது
கழுத்து மற்றும் முதுகு வலியைப் போக்குகிறது
தோள்களைத் தளர்த்துகிறது
வயிற்று உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
மலச்சிக்கலைப் போக்குகிறது
குழந்தையின்மை பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது
செய்முறை :
விரிப்பில் கால்களை நீட்டிப் படுக்கவும்.
மாறாக, பத்மாசன நிலையில் கால்களை வைத்தும் படுக்கலாம்.
கைகளைத் தரையில் நன்றாக ஊன்றி, மார்பை மேல் நோக்கி உயர்த்தவும்.
மாறாக, கைகளைப் புட்டத்துக்குச் சற்று கீழாக வைத்தும் மார்பை உயர்த்தலாம்.
பத்மாசன நிலையில் பயிலும் போது கைகளைத் தொடையின் மீது வைத்துப் பயிலலாம்.
தலையை நன்றாக கீழ் நோக்கி சாய்த்து, உச்சந்தலையைத் தரையில் வைக்கவும்.
தோள்களைத் தளர்த்தவும்.
இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு இந்நிலையில் இருக்கவும்.
பின், உடலை மெதுவாகத் தளர்த்தி, தலையைத் தரையில் வைத்து கைகளை நீட்டி ஆரம்ப நிலையில் படுத்து ஓய்வாசனத்தில் இருக்கவும்.
குறிப்பு :
மார்பை மேல் நோக்கி உயர்த்துவது கடினமாக இருந்தால், முதுகின் கீழ் yoga block அல்லது தலையணை ஒன்றை வைத்து அதன் மீது சாய்ந்து பயிலவும்.
தீவிர கழுத்து பிரச்சினை, முதுகுத்தண்டு கோளாறு உள்ளவர்கள் கண்டிப்பாக முதுகின் கீழ் yoga block அல்லது தலையணை வைத்து மட்டுமே இவ்வாசனத்தைப் பயில வேண்டும்.