அரசியல்சமூகம்

ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது – சி.வி.சண்முகம்!

நேற்றுடன் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அதிமுகவின் விதிப்படி காலாவதியாகிவிட்டது என்று சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

ஓபிஎஸ், இபிஎஸ் மோதல்

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இடயேயான மோதல், ஆலோசனை என்று கடந்த ஒரு வாரமாக அதிமுக பேசும்பொருளானது. இந்நிலையில், சலசலப்புடன் சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று அதிமுக பொதுக்குழு நடைபெற்று முடிந்தது. அதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் நேற்று டெல்லி சென்றார். ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவிற்கு அனுமதி தரக்கூடாது என்று டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஆலோசனை கூட்டம்

அதே சமயம் இபிஎஸ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். அதில் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், வளர்மதி, கே. பி அன்பழகன், கே.சி வீரமணி, வைகை செல்வன், பொள்ளாச்சி ஜெயராமன், தங்கமணி, கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து வெளியே வந்த ஆதரவாளர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

சி.வி.சண்முகம் பேச்சு

அப்போது பேசிய வைகைச்செல்வன், ‘அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தது போல வரும் 11 ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில் ஒற்றைத் தலைமை குறித்த முடிவு எடுக்கப்படும். பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணம் குறித்து தற்போது பதில் கூற முடியாது’ என்றார். அதன் பிறகு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ’23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு, ஓபிஎஸ் கையெழுத்தோடு தான் அழைப்பு கொடுக்கப்பட்டது. தான் கையெழுத்தே போடவில்லை என்கிறாரா ஓபிஎஸ் ?

பொதுக்குழு அதிகாரம்

பொதுக்குழுவை கூட்டுவதில் ஆட்சேபனை இல்லை என்று நீதிமன்றத்தில் கூட ஓபிஎஸ் தரப்பு தெரிவித்தது. உட்கட்சி விவகாரத்தில் தலையிடும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை. தேர்தல் ஆணையத்திற்கு தான் உண்டு. மேலும், வைத்திலிங்கம் தேவையற்ற வார்த்தைகளை பேசியுள்ளார். பொதுச்செயலாளர் அல்லது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு பொதுக்குழு கூட்டும் அதிகாரம் உள்ளது. அதுமட்டுமின்றி ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு மனு அளித்தால், அடுத்த 30 நாட்களுக்குள் பொதுக்குழு கூட்ட வேண்டும் என்பது கழக விதி 19ல் உள்ளது.

பதவி காலாவதியாகிவிட்டது

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி அதிமுகவில் இப்போது இல்லை. நேற்று பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டதற்கு ஒப்புதல் பெறாததால் அந்த பதவிகள் விதிப்படி காலாவதியாகிவிட்டது’ என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

Related posts