தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்ய சுடுகாட்டில் இருந்து பானையுடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நூர் முகமது (68). இவர் ஒவ்வொரு தேர்தலின் போதும், வித்தியாசமான முறையில், குதிரையில் வந்து ராஜா, ஏர் கலப்பையுடன் விவசாயி, சவப்பெட்டியில் வந்து பிணம் என பல்வேறு வேடங்களில் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் முதல் பல்வேறு தேர்தல்களில் 48 முறை போட்டியிட்டுள்ளார்.
கடந்த 1997-ல் நடந்த கவுன்சிலர் தேர்தலில் சுயேட்சையாக நின்று நூர் முகமது வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும், பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில், மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்து வருகிறார்.
இந்நிலையில் ஒட்டுக்கு பணம் வாங்கினால் இறுதிச்சடங்கு தான் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், சட்டமன்றத் தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் 49-வது முறையாக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்தார். அப்போது சுடுகாட்டில் இருந்து மண்பானையுடன் வந்த நூர் முகமது, அதனை 100 மீட்டருக்கு முன்பு உடைத்து, பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரும், கோயம்புத்தூர் தெற்கு கோட்டாட்சியருமான மாருதி பிரியாவிடம், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தது குறித்து பேசுகையில், எல்லோருக்கும் இறுதிச்சடங்கு சுடுகாட்டில் தான் நடக்கும், ஆனால் ஓட்டுக்கு பணம் வாங்கி, வாக்களித்தால் இறுதிச்சடங்கு வீட்டிலேயே நடக்கு என்பதை சுட்டிக்காட்டவே பானையுடன் வந்ததாக நூர் முகமது தெரிவித்தார்.
மேலும் கல்வி, மருத்துவம் இலவசமாக கொடுத்தாலே இந்தியா வல்லரசாக மாறும். அதன் காரணமாக அரசியல் கட்சிகள் கொடுக்கும் இலவசங்கள் வேண்டாம் என்றும், வருகின்ற தேர்தலில் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

