சினிமாசின்னத்திரை

விஜய்சேதுபதி தேசிய விருதுக்கு தகுதியானவர்- இயக்குனர் ஷங்கர் புகழாரம் !

இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் மாமனிதன் படத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

சீனு ராமசாமி கூட்டணி

தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை படங்களை தொடர்ந்து விஜய்சேதுபதி, இயக்குநர் சீனு ராமசாமி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இவர்கள் முதன்முதலில் இணைந்து பணியாற்றிய தென்மேற்கு பருவக்காற்று மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்மூலம் தனது முதல் படத்திலேயே கவனம் பெற்றார் நடிகர் விஜய்சேதுபதி. மேலும் சிறந்த படத்திற்கான தேசிய விருதை தென்மேற்கு பருவக்காற்று படம் பெற்றது.

தர்ம துரை

அதன்பிறகு மூன்றாவது முறையாக இயக்குநர் சீனுராமசாமி, நடிகர் விஜய்சேதுபதி இணைந்த படம் தர்ம துரை.  2016ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன், ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா சேர்ந்து நடித்தனர். படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற ‘எந்த பக்கம்’ என்ற பாடலுக்காக சிறந்த பாடலாசிரியர்காண தேசிய விருதை பெற்றார் வைரமுத்து.

மாமனிதன்

இந்நிலையில், சீனுராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் இன்று வெளியாகி இருக்கும் படம் ‘மாமனிதன்’ இந்த திரைப்படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். மேலும் தன்னுடைய தந்தை இளையராஜாவுடன் முதன் முதலாக சேர்ந்து இசை அமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. கடந்த 2019ம் ஆண்டே தயாரான இத்திரைப்படம் கொரோனா காரணங்களால் வெளியீடு தள்ளிபோனது.

maamanithan movie

தேசிய விருது

இதனையடுத்து மாமனிதன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், நேற்று இப்படத்தின் சிறப்பு காட்சி பிரபலங்களுக்கு திரையிடப்பட்டது. இதில் கலந்துகொண்ட இயக்குனர் ஷங்கர் மாமனிதன் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் சீனு ராமசாமியையும் நடிகர் விஜய் சேதுபதியையும் வெகுவாக பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், ‘மாமனிதன் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை தருகிறது. சீனு ராமசாமியின் ஆத்மார்த்தமான பங்களிப்பு மூலம் இது எதார்த்தமான படமாக வந்துள்ளது. விஜய் சேதுபதியின் நடிப்புக்கு தேசிய விருதே கொடுக்கலாம்’ என்று ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts