உணவுமருத்துவம்

மாறிவிட்ட உணவு முறை.. பின்பற்றவேண்டிய உணவும் ஆரோக்கிய முறையும்!

பரபரப்பான வாழ்க்கையில் சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். உடலில் சக்தி உற்பத்தியாவதற்கும் செல்கள் வளர்ச்சியடைவதற்கும் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகச் செயல்படுவதற்கும் உணவே காரணமாக இருக்கிறது. அந்த உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதில் நாம் கவனம்கொள்ள வேண்டியது அவசியம்.

ஆரோக்கியமான இயற்கை உணவுகளைத் தேர்வுசெய்தல், சாப்பிட்ட பிறகு செய்யக் கூடாத விஷயங்கள் உள்ளிட்ட பொதுவான உணவு விதிகள் பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள்:

இயற்கை வைத்தியத்தில், தாதுஉப்புகள் அதிகம் உள்ள இளங்கீரைகள், புதிதாய்ப் பறித்த பச்சை காய்கறிகள், பழங்கள் போன்றவை முதல் தரமான உணவுகளாகும். புரதப் பொருட்கள், மாவுப் பொருட்கள், சர்க்கரைப் பொருட்கள், கொழுப்புப் பொருட்கள் உள்ள தானியங்கள், பயிறுகள், கிழங்குகள், பருப்புகள் ஆகியவை இரண்டாம் தரமான உணவுகள். இந்த இரண்டையுமே நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

சத்தான உணவைவிட ஜீரணிக்கும் உணவே உன்னத உணவு. நோயை உண்டாக்காமல் ஜீரணிக்கக்கூடிய உணவையே நாம் உட்கொள்ள வேண்டும்.

நம் உடலைப் பற்றிய புரிதல் அவசியம். வெளியில் தெரியாத நோய்கள், பரம்பரை நோய்கள் பற்றி தெரிந்துவைத்திருத்தல் அவசியம். நோய் இருப்பின், அதன் தீவிரம், நோயின் வகை, தவிர்க்க வேண்டிய உணவுகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பழங்கள், காய்கறிகள், கீரைகள், தேங்காய், முளைகட்டிய தானியங்கள், முளைகட்டிய பயறுகள் ஆகியவை உடலுக்கு ஏற்ற உணவுகள்.

தினமும் காலை உணவை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளுக்குத் தேவையான முழு சக்தியையும் காலை உணவே அளிக்கிறது. எந்தக் காரணம்கொண்டும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

இரவு மிகக்குறைந்த அளவே சாப்பிட வேண்டும். இரவு முடிந்தவரை அரிசி சாப்பாடைத் தவிர்த்து, கோதுமை, ரவை, ராகி, சிறுதானியங்கள் உள்ளிட்ட உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. இதனால், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
சாப்பாட்டுக்கு இடையே தண்ணீர் குடிக்கக் கூடாது. இதனால், வயிற்றில் சுரக்கும் ஜீரண அமிலத்தின் செயல்திறன் குறையும். செரிமானம் தாமதப்படும்.சாப்பிட்டதும் நடக்கக் கூடாது. சாப்பிட்ட உடனே நடந்தால், உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால், உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால், சாப்பிட்டும், சத்துகள் நம் உடலில் சேராது.

சாப்பிட்டதும் தூங்கக் கூடாது. சாப்பிட்டவுடன் படுக்கைக்குச் சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. இதனால், வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும் நோய்க்கிருமிகளும் உருவாகும்.

 

Related posts