இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் டிடிவி தினகரன் டெல்லி அமலாக்க துறையிடம் நேரில் ஆஜரானார். 2016 ஆம் ஆண்டு, தமிழ் நாட்டின் அப்போதைய முதலமைச்சரும், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல் நலக்குறைவால் காலமானார்.
ஜெயலிதாவின் மறைவுக்கு பிறகு சசிகலா, கழகத்தின் பொதுச்செயலாளராக பதவி ஏற்றார். இதற்கிடையே, சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டத்தை அடுத்து பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டார். சசிகலாவைத் தொடர்ந்து டிடிவி தினகரனும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து தினகரன் “அம்மா மக்கள் முன்னேற கழகம்” என்ற தனிக்கட்சியை தொடங்கினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு தினகரனும், மதுசூதனனும் உரிமை கோரினர். அதனால், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சினத்தை முடக்கி, தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கியது. அப்போது குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார். இரட்டை இலை சின்னத்தை பெற தினகரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரட்டை இலை சின்னம் அதிமுக கட்சிக்கு சொந்தமானது என்று தீர்ப்பளித்தார். இதற்கிடையே, அ.தி.மு.கவின் இரட்டை இலை சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து பெறுவதற்கு சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் தினகரன் லஞ்சம் கொடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இரட்டை இலை சின்னத்தைப் பெற, தன்னிடம் ரூ.15 கோடி லஞ்சமாக தினகரன் கொடுத்தார் என அமலாக்கத்துறை விசாரணையில் சுகேஷ் சந்திரசேகர் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரனை டெல்லி அமலாக்கத்துறை நேற்று விசாரணைக்கு அழைத்தது.
சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய தினகரன் “சுகேஷ் சந்திரசேகர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான வாக்குமூலம் அளிக்கிறார். அவருக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் நிரபராதி எனக்கு ஒன்றும் தெரியாது” என்று கூறினார்.