இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தானைத் தொடர்ந்து நேபாளத்திலும் பொருளாதார நெருக்கடி உருவாகி உள்ளது. இயற்கையாகவே எழில்மிகுந்த அமைவிடத்தை கொண்ட நேபாளம், பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை அதிகம் ஈர்த்த ஒரு நாடு.
மாறுபட்ட காலநிலை, சிறந்த பௌத்த கட்டிடக்கலை மற்றும் கலாச்சாரம், மின்னும் நீரோடைகள் என நம்மை நேபாளத்தின் மீது காதலில் விழவைப்பவை ஏராளம். போகாராவில் பஞ்சி ஜம்பிங், பசுபதிநாதர் கோவில், சாகர்மாதா தேசிய பூங்கா, பழமையான பதான் நகரம், போட் கோஷியில் ராஃப்டிங், சிகரங்களான எவரெஸ்ட், லோட்சே, மகலு மற்றும் சோ ஓயு மலை ஆகியவை நேபாளத்தின் இன்றியமையாத சுற்றுலாத் தளங்களாகும்.
நேபாளமானது பெரும்பாலும் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடாகவே உள்ளது. நாட்டின் அந்நிய செலாவணியில் சுற்றுலாத் துறை முக்கிய மூல ஆதாரமாக பார்க்கப்படுகிறது. பிரம்மிப்பூட்டும் மற்றும் அதிசயத்தில் ஆழ்த்தும் இயற்கையின் வாழிடமான இமயமலை நேபாள நாட்டில் தான் அமைந்துள்ளது.
இமயமலை சாதாரணமாகவே மிகவும் குளிராக இருக்கும், அங்கு எவ்வாறு பயணம் செய்வது என்றுதான் நிறைய பேர் நினைப்பார்கள். ஆனால், பனிமூடிய சிகரங்கள், உறைந்துகிடக்கும் ஏரிகள் , பனிச்சறுக்கு விளையாட்டுகள் என்று இமயமலை பனிக்காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் சொர்கமாகவே திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றின் எதிரொலியாய் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சுற்றுலாத்துறை முடங்கியதால் நேபாளத்தின் வருமானம் கேள்விக்குறி ஆனது.
இதன் காரணமாக நாட்டின் அன்னிய செலாவனி கையிருப்பு மோசமாக குறைந்துள்ளது. இந்நிலையில், கொரானோ கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டு அமெரிக்கா மற்றும் இந்தியாவின் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது நேபாளத்திற்கு ஆறுதலான ஒரு விஷயம். இலங்கையில் நடக்கும் பொருளாதார நெருக்கடியை ஒப்பிடும் போது நேபாளத்தின் பிரச்சினை பெரிதாக இல்லை என்றும், நோபாள அரசு தற்போது கவனமாக செயல்பட வேண்டுமென்றும் பல உலக நாடுகள் எச்சரித்து வருகின்றனர்.