அமெரிக்காவில் உள்ள மெமோரியல் ஸ்லோன் கேட்டரிங் கேன்சர் சென்டர் புற்று நோயை முற்றிலும் குணமாக்கும் ஒரு புதிய மருந்தை கண்டுபிடித்து சோதனையில் வெற்றியும் பெற்றுள்ளது.
புற்றுநோய்
உடலுக்கு அடிப்படையாக உள்ள உயிரணுக்களை தாக்கும் நோய் தான் புற்றுநோய். புற்று நோய் ஒரு தொற்றுநோய் அல்ல. ஆண்களுக்கு நுரையீரல், குடல், உணவுக்குழாய், ப்ராஸ்ட்ரேட் சுரப்பிகளிலும், பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு, குடல், கர்ப்ப பை வாய் ஆகியவற்றிலும் புற்றுநோய் உருவாகிறது.
உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் இறப்பை கட்டுப்படுத்தும் மரபணுக்களில் மாற்றம் ஏற்படுவதால் புற்றுநோய் உருவாகிறது. புகையிலை உபயோகித்தால், உணவுமுறைகள், சூரியனின் கதிர்வீச்சு, மாசு மற்றும் நச்சுத்தன்மை நிறைந்த வேலை, சுற்றுப்புற சூழ்நிலை, வாழ்க்கைமுறை ஆகியவை புற்றுநோய் ஏற்பட காரணிகளாக உள்ளன.
சோதனையில் வெற்றி
உலகம் எத்தனையோ தொழில்நுட்ப வளர்ச்சிகளை கண்டாலும் கேன்சரை முற்றிலும் ஒழிக்க மருந்து கண்டுபிடிப்பது சவாலாகவே இருந்து வந்தது. அந்த சவாலை முறியடிக்கும் விதமாக அமெரிக்கா மேன்ஹாட்டானில் உள்ள மெமோரியல் ஸ்லோன் கேட்டரிங் கேன்சர் சென்டர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் டொஸ்டெர்லிமப் (Dostarlimab) என்னும் கேன்சரை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து ஒன்றை கண்டுபிடித்து சோதனையில் வெற்றியும் பெற்றுள்ளது.
கீமோதெரபி இல்லை
டொஸ்டெர்லிமப் (Dostarlimab) மருந்தை கலஃஸோஸ்மித்க்லைன் நிறுவனம் ஸ்பான்சர் செய்துள்ளது. இந்த மருந்து வைத்து சோதனை செய்யப்பட்ட அனைத்து நோயாளிகளும் கேன்சரில் இருந்து 100 % குணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு கீமோதெரபி மருத்துவ சிகிச்சைகளை வழங்கவில்லை, எந்தவித ஆப்ரேஷனும் செய்யப்படவில்லை. மாறாக, டொஸ்டெர்லிமப் (Dostarlimab) என்ற மருந்தின் மூலம் குணப்படுத்தியுள்ளனர்.
பக்கவிளைவுகள் இல்லை
மொத்தம் 18 குடல் புற்றுநோயாளிகளுக்கு இந்த மருந்து வழங்கப்பட்ட நிலையில் அனைவரும் முற்றிலும் குணமடைந்துள்ளனராம். MRI மற்றும் PET எனப்படும் அனைத்து சோதனைகளிலும் கேன்சர் உடலில் இல்லை என்றே முடிவுகள் வெளியாகி உள்ளது. பொதுவாக கேன்சர் நோய்க்கு பிறகு உடலில் பக்கவிளைவுகள் தோன்றும். ஆனால், இந்த மருந்தை பயன்படுத்தியவர்களுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை என கூறப்படுகிறது. அதேபோல், சிகிச்சை அளிக்கப்பட்டு 25 மாதங்களுக்கு மருந்து செலுத்தப்பட்டவர்களின் உடலில் மீண்டும் எந்தவித கேன்சர் செல்கள் தோன்றவில்லை.
இயற்கையாக அழிக்கின்றது
இந்த டொஸ்டெர்லிமப் மருந்து உடலில் மூன்று வாரங்களுக்கு ஒரு முறை என மொத்தம் 6 மாதங்கள் செலுத்தப்படும். உடலில் இருக்கும் கேன்சர் செல்களை அடையாளப்படுத்தவும் இது உதவுகிறது. கேன்சர் செல்கள் பொதுவாக உடலின் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்ப மாஸ்க் போன்ற ஒரு படலத்தை கொண்டு மறைந்து இருக்கும்.
இதனால், உடலின் எதிர்ப்பு சக்தி செல்களால் கேன்சர் செல்களை கண்டறிய முடியாத நிலை ஏற்படுகிறது. ஆனால், டொஸ்டெர்லிமப் மருந்து அந்த மாஸ்க்கை நீக்குவதன் மூலம் உடலின் எதிர்ப்பு சக்தி செல்கள் இயற்கையாக கேன்சர் செல்களை அழிக்கின்றது. புற்றுநோயால் மோசமான நிலையை அடைந்தவர்களை கூட இந்த மருந்து குணமாக்கி உள்ளது.
டொஸ்டெர்லிமப் மருந்தை கொண்டு சிகிச்சை அளிக்க 8 லட்சம் ஆகும் எனவும், மார்கெட்டிற்கு வரும்போது இதை விட கூடுதலாக விலை உயர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இம்மருந்தை மற்ற ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்த பிறகே மார்கெட்டிற்கு வரும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.