மதுரை மேலவாசல் பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் தடைகளை மீறி பட்டாசுகள் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது.
கோவில் திருவிழா
மதுரை திடீர்நகர் அருகில் உள்ள மேலவாசல் பகுதியில் சுமார் 1000 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. மேலும், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் இந்த பகுதியில் தான் சந்தனமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
பக்தர்கள் கூட்டம்
அதன்பெயரில் கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டி கோலாகலமாக கோவில் திருவிழாவை தொடங்கினார்கள். இதனையொட்டி பக்தர்கள் தினமும் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்த வண்ணம் இருந்தனர். இதனால் கோவில் திருவிழா கலையோடு பக்தர்கள் கூட்டம் அலைமோத தொடங்கின.
தீ விபத்து
இந்நிலையில், நேற்று கோவிலின் முன்பகுதியில் பூப்பல்லாக்கு தூக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இளைஞர்கள் சிலர் அங்கு பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. அதனால் எதிர்பாராத விதமாக திருவிழா பந்தலில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அதனை கண்டு அங்கு கூடியிருந்த பக்தர்கள் அச்சமடைந்து சிதறி ஓடினர். அங்கிருந்த இளைஞர்கள் உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் தீ வேகமாக அனைத்து இடத்திற்கும் பரவியது.
தீயணைப்புத் துறையினர்
இதனால் அங்கிருந்த, இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் அங்கிருந்த சில பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். சுமார் 20 நிமிட போராட்டத்திற்கு பிறகு அவர்கள் தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்ட்டவசமாக எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
கோவில் திருவிழாவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.