அரசியல்தமிழ்நாடு

காவல் துறைனருக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை !

‘தவறு செய்யும் காவல்துறை அதிகாரிக்கு இந்த ஆட்சியில் இடமில்லை’ என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

அண்மைக்காலமாக பொதுமக்களின் மீது போலீசாரின் அத்துமீறல் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டபேரவை கடைசி நாள் கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வந்தது. காவல் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் பேசினார். அப்போது பேசிய அவர், ‘காவல் துறையை யாரும் கைநீட்டி குறை சொல்ல முடியாத துறையாக இருக்கவேண்டும். எங்கோ ஒரு காவலர் செய்யக்கூடிய தவறு, இந்த ஆட்சியின் தவறாக குற்றம்சாட்டப்படும்.

 முதல்வர் எச்சரிக்கை

எனவே, காவல் துறையை சார்ந்த ஒவ்வொருவரும் விமர்சனத்துக்கு இடமில்லாமல் தங்கள் பணிகளை செய்யவேண்டும். தவறு செய்யும் காவல் அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் இடமில்லை’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ‘காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒரிரு சம்பவங்களை வைத்து காவல் துறையை விமர்சிக்க வேண்டாம். விசாரணை கைதிகள் உயிரிழப்பு எந்த ஆட்சியில் நடந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது. விசாரணைக்கு அழைத்து வருவோரை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ துன்புறுத்தக்கூடாது. விசாரணைக்கு ஒருவரை அழைத்து வரும்போது உச்சநீதிமன்ற தீர்ப்பை காவலர்கள் பின்பற்ற வேண்டும்’ என்று வலியுறுத்துள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால், இன்னோரு கை காவல்துறை. எந்த அரசாங்கத்தில் இந்த இரண்டும் முறையாக சரியாக இயங்கிறதோ,  அந்த அரசாங்கம் தான் தலை சிறந்த அரசாங்கமாக இருக்கமுடியும்.

சில கட்டளைகள்

அந்த வகையில் சில கட்டளைகள் பிறப்பித்துள்ளார், காவல்துறை என்றாலே குற்றங்களை தடுக்கும் துறையாக, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தரக்கூடிய துறையாக இருக்கவேண்டும். காவல் துறை என்பது குற்றங்களே நடக்காத சூழலை உருவாக்கி தரக்கூடிய துறையாக இருக்கவேண்டும் என்பது என்னுடைய ஆசையும் இந்த அரசினுடைய கொள்கையும் அதுவே என்றார்.

தமிழக மக்கள் அமைதியாக வாழ வழிவகை செய்துள்ளோம். இந்த ஆட்சியில் சாதி சண்டைகள் இல்லை, மதக்கலவரம் இல்லை, துப்பாக்கிசூடு இல்லை, அராஜகங்கள் இல்லை. இது தான் இந்த அட்சியின் மிகப்பெரும் சாதனை என பெருமிதம் கொண்டுள்ளார்.

காவலர்களுக்கு அறிவிப்பு

மேலும், காவலர்கள் இறப்பு, விபத்து பாதிப்பு காப்பீட்டு தொகையை 30 லட்சத்தில் இருந்து 60 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். சரித்திர பதிவேடு உள்ள குற்றவாளிகளை கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க ‘பருந்து’ என்ற செயலி ரூ .33லட்சம் செலவில் உருவாக்கப்படும்.

3000 புதிய காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவுடன் இணைத்து போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கபிரிவாக சீரமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

 

Related posts