தமிழ்நாடுமருத்துவம்

அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு – மருத்துவர்கள் அலட்சியம் என உறவினர்கள் சாலை மறியல் !

மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு. மருத்துவர்கள் அலட்சியமே காரணம் என மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா காரைமேடு சேர்ந்தவர் கூலி தொழிலாளி மணிகண்டன். இவரது கர்ப்பிணி மனைவி பிரனீபாவுக்கு தலைபிரசவம் என்பதால் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கடந்த 9ம் தேதி அழைத்து வந்துள்ளார். குழந்தை நல்ல நிலையில் உள்ளதாகவும் இரு தினங்களில் சுகப்பிரசவம் ஆகும் என கூறி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

குழந்தை இறப்பு

இந்நிலையில் நேற்று வரை நன்றாக இருந்த பிரனீபாவுக்கு தலைவலி ஏற்பட்டடுள்ளது. இதையடுத்து அங்கு இருந்த செவிலியர் பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடும்படி கூறியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் பணியில் இருந்த மருத்துவர் நந்தினி பிரனீபாவை பரிசோதனை செய்து விட்டு பிரஷர் அதிகமாக உள்ளது குழந்தையும் திரும்பியுள்ளதால் உடனடியாக சிசேரியன் செய்ய வேண்டும். இல்லையென்றால் தாய் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

உறவினர்கள் போராட்டம்

ஆனால், குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. பின்னர் குழந்தை இறப்பிற்கு பயிற்சி செவிலியர்களின் அலட்சியமே காரணம் குற்றம் சாட்டிய உறவினர்கள். குழந்தையின் இறப்பிற்கு மருத்துவமனையே பொறுப்பேற்க வேண்டும் என கூறி மருத்துவமையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர்

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி, தலைமை மருத்துவர் ராஜசேகர் டிஎஸ்பிக்கள் வசந்தகுமார், லாமேக் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் நாகையிலிருந்து மருத்துவக்குழுவினர் மூலம் மருத்துவசிகிச்சை குறித்து விசாரணை செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். அதன் பின்னர் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Related posts