சென்னைக்கு மிக அருகில் உள்ள புகழ்பெற்ற வைணவ திருத்தலம் சிங்கபெருமாள் கோவில். சிறிய குன்றின் மீது கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீபாடலாத்ரி நரசிம்மர். நெற்றிக்கண்ணுடன் (முக்கண்ணுடன்) பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் அருள்புரிகிறார்.
‘பாடலாத்ரி’ என்றால் செந்நிறக் குன்று என பொருள். குடைவரையாக திகழும் கோவில் கருவறையில் சுவாமியுடன், ஸ்ரீஅஹோபிலவல்லித் தாயார், ஸ்ரீதேவி – பூதேவி, உத்ஸவர் ஸ்ரீபிரகலாதவரதர் ஆகியோரையும் தரிசிக்கலாம். கோவில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
தல வரலாறு
நரசிம்ம அவதாரக் காலத்தில் இத்தலம், அடர்த்தியான மரங்கள் சூழ்ந்த காடாக இருந்தது. அக்காட்டில் ஜபாலி முனிவர்,பெருமாளை காண வேண்டும் என்று எண்ணி தவம் செய்துவந்தார்.
அவரது ஆசையை நிறைவு செய்யும் வகையில் நரசிம்மர் இரணியனை வதம் செய்தவுடன் உக்கிர நரசிம்மராக (கோபமூர்த்தியாக) முனிவருக்குக் காட்சி கொடுத்தார்.
இரணிய வதத்திற்குப்பின் இரத்தக்கறை படிந்த கரங்களை இத்தலத்திற்கு அருகிலுள்ள செங்குன்றக்குளத்தில் கழுவிய பின் இங்கு வந்ததாகக் கூறுவர்.
முனிவரின் ஆசைப்படி நரசிம்ம வடிவத்தோடு சிவனைப் போன்று முக்கண்ணுடன் (நெற்றிக்கண்) காட்சி கொடுத்தார் நரசிம்மர்.
மூலவரான நரசிம்ம மூர்த்தியின் நெற்றியிலுள்ள நாமத்தை விலக்கும் பொழுது நெற்றிக்கண்ணைத் தரிசனம் செய்யலாம்.
ஆலய அமைப்பு
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். சங்கும் சக்கரமும் ஏந்தி, வலது கை அபயம் அளிக்க, இடது கையைத் தொடையில் வைத்துள்ளார்.
வலது காலை மடித்து வைத்தும் இடது காலைத் தொங்கப் போட்டுக் கொண்டும் நெற்றிக் கண்ணுடன் (த்ரிநேத்ரதாரியாய்) திருமார்பில் மகாலட்சுமியுடன் வீற்றிருந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.
1008 சுலோகங்கள் பொறித்த வெள்ளியால் செய்யப்பட்ட சஹஸ்ரநாம மாலையுடனும் அரக்கு நிற சாளக்ராம மாலையுடனும் அருள்புரிகிறார். மூலவர் பஞ்ச மூலிகைகளால் உருவாக்கப்பட்டதால் அபிஷேகம் கிடையாது.
தல விருட்சம்- பாரிஜாதமாகும். ஆண்டாள் மற்றும் லட்சுமி நரசிம்மருக்கு தனித்தனியாக சந்நிதிகள் உள்ளன. சந்நிதித் தெரு முனையில் அனுமாருக்கு சந்நிதி உள்ளது.
குடைவரையாகத் திகழும் கோயில் கருவறையில் அருளும் சுவாமியுடன், குன்றையும் சேர்த்து கிரிவலமாக வருவது இத்தலத்தின் சிறப்பம்சம் ஆகும். பெருமாள் திருமேனியே மலையாக விளங்குவதால் பவுர்ணமி கிரிவலம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.
வழிபாடு
நரசிம்ம அவதாரம் பிரதோஷ நேரத்தில் நடந்ததால் பிரதோஷ காலத்தில் நரசிம்ம பெருமாளை வழிபடுவது சிறப்பு. இங்குள்ள ஸ்ரீபிரதோஷ நரசிம்மருக்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசிப்பது பெரும் புண்ணியம். பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம், சுவாதி, ஞாயிற்றுக்கிழமைகளில் கிரிவலம் வந்து நரசிம்மரை வழிபடுவது நல்லது.