சென்னையில் பிரபல ஹோட்டலில் சோலாப்பூரியில் புழுக்கள் நெளிந்து வந்துள்ளது என எழுந்த புகாரை அடுத்து அந்த ஹோட்டல் மீது உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சோலா பூரியில் புழுக்கள்
சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராணி. இவர் நேற்று மாலை தன்னுடைய மகனுடன் திருமங்கலத்தில் உள்ள பிரபல மாலில் 3வது தளத்தில் உள்ள ஒரு தனியார் சைவ உணவகத்திற்கு சாப்பிட சென்றுள்ளார்.

அப்போது தனது மகன் சோலாபூரி வேண்டும் என்று கேட்டதால் சோலா பூரி ஒன்று ஆர்டர் செய்துள்ளார். அவர்கள் ஆர்டர் செய்த சோலா பூரியை சப்பிளையர் கொண்டுவந்து கொடுத்தார். அப்போது பூரிக்குள் இருந்து புழு நெளிந்து வருவதை கண்டு ராணி அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே ராணி கத்தி கூச்சலிட்டார். பின்னர் தான் உணவகத்தின் கிச்சனை பார்க்க வேண்டும் என அந்த ஹோட்டலில் வேலை செய்யும் நபர்களிடம் சண்டையிட்டுள்ளார். முதலில் மறுத்த நிர்வாகம் ஒரு கட்டத்திற்கு பிறகு ராணியை உணவகத்தின் கிச்சனை பார்க்க அனுமதித்தனர்.
புகார்
உணவகத்தின் கிச்சனுள்ள சென்று பார்த்த ராணி அதிர்ச்சியும் கோவமும் அடைந்துள்ளார். ஏனென்றால் கிச்சனில் சோலா பூரி தயாரிக்க வைத்திருந்த மாவில் பல புழுக்கள் மேலேயே நெளிந்து கொண்டிருப்பதை கண்டுள்ளார். இதைப்பற்றித ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது ராணிக்கும் மற்றவர்களுக்கும் நிர்வாகத்தின் தரப்பில் சரியாக பதில் சொல்லவில்லை என சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ராணி கோயம்பேடு போலீசில் புகார் தந்தார். இதன் அடிப்படையில் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சம்பந்தப்பட்ட பெண் மற்றும் ஓட்டல் நிர்வாகத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
அபராதம்
இதன்பிறகு ராணி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுகுறித்து புகார் அளித்தார். தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சுந்தரமூர்த்தி தலைமையிலான குழுவினர் வந்தனர்.

புழு இருந்த மாவின் மாதிரிகளை கிச்சனில் இருந்து சேகரித்தனர். மேலும், அங்கு வைத்திருந்த மற்ற உணவுகளின் மாதிரிகளையும் சேகரித்து ஆய்வுக்கு கொண்டு சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி அந்த ஹோட்டல் நிர்வாகிகளை கண்டித்ததுடன் அபராதமும் விதித்துள்ளனர்.
சென்னையில் இரண்டு நாட்கள் முன்புகூட பிரபல ஹோட்டல் ஒன்றில் மட்டன் பிரியாணியில் புழுக்கள் இருந்ததாக மிக பெரிய சர்ச்சை கிளம்பியது. சமீபத்தில் இதுபோன்ற சம்பவங்கள் சென்னை போன்ற பெரிய நகரங்களில் அதிக அளவில் நடந்து வருகிறது.

