தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் தோளை தட்டி நலம் விசாரித்தார் மோடி. இதனால் அண்ணாமலை மிகுந்த மகிழ்ச்சி.
தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி
தமிழகத்தில் 31 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மத்திய அரசின் பல்வேறு திட்ட பணிகள் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
வரவேற்பு
தமிழக அரசு சார்பாக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் வரவேற்றனர். நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, தமிழக பாஜக சார்பில் விமான நிலைய வளாகத்தில் மேள, தாளங்கள் முழங்க பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் மோடியை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
அதன் பின்னர், சென்னை விமான நிலையத்திலிருந்து ஐ.என்.எஸ். அடையாறு கடற்படைத் தளத்திற்கு, ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி சென்றார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின் சால்வை அணிவித்து மோடியை வரவேற்றார். சிலப்பதிகாரம் புத்தகத்தையும் மோடிக்கு பரிசாக வழங்கினார்.
நெகிழ்ச்சியில் அண்ணாமலை
பிரதமரை வரவேற்க சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி, “ஹலோ அண்ணாமலை எப்படி இருக்கீங்க” என்று தமிழில் நலம் விசாரித்து அண்ணாமலையின் தோளை தட்டிப் பேசினார். இதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் நெகிழ்ந்தார் அண்ணாமலை.
பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
இதனை தொடர்ந்து, நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு காரில் சென்ற பிரதமர் மோடிக்கு வழி நெடுகிலும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிவானந்த சாலையில் சென்றபோது காரின் கதவை திறந்து அதிலிருந்து எழுந்து நின்று பொதுமக்களை நோக்கி கையசைத்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.
திட்டங்கள் அறிவிப்பு
இதனையடுத்து நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் கலந்துகொண்டனர். தமிழ்தாய் வாழ்த்து பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதன்பின்னர், 6 திட்டக்களுக்கு அடிக்கல் நாட்டிவைத்து, முடிவுற்ற 5 திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.