தூத்துக்குடி துறைமுகத்திற்கு முதல்முறையாக 292 மீட்டர் நீளமும் 45 அகலமும் கொண்ட கேப் ப்ரீஸ் என்ற கேப் வகை சரக்கு கப்பல் இன்று கையாளப்பட்டது.
வ.உ. சிதம்பனார் துறைமுகம்
தூத்துக்குடி வ.உ. சிதம்பனார் துறைமுகத்தில் முதல்முறையாக 292 மீட்டர் நீளமும் 45 அகலமும் உடைய 1,80,000 டன் கொள்ளளவு கொண்ட கேப் ப்ரீஸ் (cape breeze) என்ற கேப் வகை சரக்கு கப்பல் இன்று கையாளப்பட்டது. 11.4 மீட்டர் மிதவை ஆழமுடன் வந்த கேப் வகை கப்பல் ஓமான் நாட்டிலிருந்து வந்தது. சுமார் 92,300 டன் சுண்ணாம்புக்கல் மற்றும் ஜீப்சமுடன் தூத்துக்குடி வ.உ. சிதம்பனார் துறைமுகத்தின் கப்பல்தளம் 9 -ல் கையாளப்பட்டது.
கேப் ப்ரீஸ் (cape breeze) கப்பல்
இக்கப்பலிருந்து, ஈஸ்டேர்ன் பல்க் டிரேடிங் & ஷிப்பிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்காக சுண்ணாம்புக்கல் மற்றும் ஜீப்சம் இறக்குமதி செய்யப்படவுள்ளது. இதுகுறித்து வ.உ. சிதம்பனார் துறைமுகத்தின் நிர்வாக தலைவர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது அவர் கூறுகையில், இது போன்ற பெரிய வகை கப்பல்களை கையாளுவதன் மூலம் சரக்கு போக்குவரத்துக்கு செலவுகளை குறைப்பதுடன் உலகளவில் இறக்குமதி ஏற்றுமதி வர்த்தகத்தில் மிக குறைந்த கட்டணத்தில் கையாள முடியும் என்று கூறினார்.
தா.கி. ராமச்சந்திரன் இ.ஆ.ப
மேலும் பேசிய அவர், இக்குறிப்பிடதக்க சாதனை புரியவதற்கு உறுதுணையாக இருந்த துறைமுக பணியாளர்கள், கப்பல் முகவர்கள், சரக்கை கையாளும் முகவர்கள், நகரும் பழுதுக்கி மற்றும் கன்வேயர் இயந்திர ஓட்டுநர்கள், போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
இறக்குமதி பொருட்கள்
வ.உ. சிதம்பனார் துறைமுகத்தில் தற்போது பல்வேறு வகை சரக்குகளான நிலக்கரி, காற்றாலை இறகுகள், இயந்திர உதிரிபாகங்கள், உரங்கள், உணவு பொருட்கள், சுண்ணாம்புக்கல், ஜீப்சம் மற்றும் சிமெண்ட் ஆகியன இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் மிக குறைந்த கட்டணத்தில் சரியான தொழில்நுட்பம் , மற்றும் சிறந்த பணியாளர்களை வைத்து தென்னிந்தியாவில் மிக விரைவாக வளர்ந்து வரக்கூடிய துறைமுகமாக வ.உ. சிதம்பனார் துறைமுகம் திகழ்கிறது.