தமிழகத்தில் விரைவில் 3,000 காவலர்கள் தேர்வு செய்யப்படவுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இத்துடன் மேலும் மூன்று அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு பதிலளித்த துறையின் அமைச்சரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள்,
‘விரைவில் 3 ஆயிரம் புதிய காவலர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். திமுக ஆட்சியில் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது திமுக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்காரணமாக அனைவருக்கும் நல்ல நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களின் பயன்பாட்டை தடுக்க காவல்துறை தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக பான் மசாலா, குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் மதுவிலக்கு பிரிவு மறுசீரமைப்பு செய்யப்படும்.
அத்துடன் சென்னையில் 3 மண்டலங்களில் போக்குவரத்து கண்காணிப்பு மண்டலங்கள் அமைக்கப்படும். காவலர்களுக்கு இடர்படி தொகை உயர்த்தி வழங்கப்படும். காவல் ஆய்வாளர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூ30 லட்சத்திலிருந்து 60 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். சமூக ஊடகங்களை கண்காணிக்க ஊடக மையம் அமைக்கப்படும். திருவாரூரின் முத்துப்பேட்டையில் 12 கோடி ரூபாய் செலவில் புதிய பயிற்சி இல்லம் கட்டப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.