சமூகம்தமிழ்நாடு

தமிழகத்தில் சாதியால் மற்றும் ஒரு அவலம்; பழங்குடியின மாணவரை தீயில் தள்ளிய சக மாணவர்கள்!

விழுப்புரம் மாவட்டம் அருகே 6ம் வகுப்பு படித்து வரும் பழங்குடியின மாணவரின் சாதியை கேலி செய்து தீயில் தள்ளிய சக மாணவர்கள்.

பழங்குடியின மாணவர்

விழுப்புரம் : திண்டிவனம் அருகே உள்ள காட்டுச்சிவிரி ஊரை சேர்ந்த சிறுவன் சுந்தர்ராஜ். பழங்குடி சமூகத்தை சேர்ந்த இவர் அந்த ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று வருகிறார். 6ம் வகுப்பு படித்து வரும் இவரை, அதே பள்ளியில் படித்து வரும் மற்றொரு பிரிவை சேர்ந்த மாணவர்கள் சிலர் அவரின் சாதி பெயரை சொல்லி கேலி செய்துள்ளார்கள். இதனையடுத்து மாணவர் சுந்தர்ராஜ் தன் தந்தை கன்னியப்பனிடம் கூறியிருக்கிறார்.

தீ விபத்து

இதுகுறித்து வருத்தப்பட்ட கன்னியப்பன் பள்ளியில் புகாரளித்துள்ளார். நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது சுந்தர்ராஜனை மற்றோரு பிரிவை சார்ந்த மாணவர்கள் வம்பிழுத்துள்ளனர். மேலும், அங்கு எரிந்து கொண்டிருந்த தீயில் சுந்தர்ராஜனை தள்ளி விட்டுள்ளனர். இதனால் தீக்காயமடைந்த மாணவர் அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் உடலை நனைத்துக் கொண்டார். பின்பு சக மாணவர்களின் உதவியால் சுந்தர்ராஜ் வீடு திரும்பியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி

மாணவரின் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்த சுந்தர்ராஜின் கும்பத்தினர் உடனே அவரை அருகில் உள்ள மண்ணம் பூண்டி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், தீக்காயம் அதிகமாக இருப்பதால் தீவிர சிகிச்சைக்காக மண்ணம் பூண்டி மருத்துவமனையில் இருந்து திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மாற்றப்பட்டுள்ளார்.

புகார்

இந்நிலையில் சுந்தர்ராஜின் தந்தை கன்னியப்பன் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் மாணவரிடம் வாக்குமூலம் பெற்றனர். அதைத்தொடர்ந்து இதை செய்தவர்கள் மீது போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாணவர் சுந்தர்ராஜ் பேசும் வீடியோ பதிவு ஒன்று சமூக வலையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பழங்குடியின மக்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. மேலும், அதை தடுக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியிருக்கிறார்கள்.

 

Related posts