செல்போன் திருடியதாக தமிழகத்தை சேர்ந்த 5 பேரை ஜெய்ப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜெய்ப்பூர்
தமிழகத்தைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவர், ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்றை உருவாக்கி வேலூரில் இருந்து ஜெய்ப்பூருக்கு ரயிலில் சென்று அங்கு உள்ள விடுதிகளில் இருந்த செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகளை திருடியுள்ளார்.
ஐந்து பேர் கைது
DIG பிரகலாத் சிங் கிருஷ்ணியா, ‘பஜாஜ் நகர் காவல்துறையின் ஒரு குழு ஞாயிற்றுக்கிழமை இந்த கும்பலை கண்டுபிடித்து அதன் முக்கிய தலைவர் உட்பட ஐந்து பேரை கைது செய்தது’ என்று கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பின்வருமாறு அடையாளம் காணப்பட்டனர்.
சக்திவேல் (21), சந்தோஷ் (18), கோகுல் (24), தியாகராஜன் (23) மற்றும் முக்கிய குற்றவாளிகளான எஸ்.காமராஜ் (42) என அடையாளம் காணப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் வேலூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
100 திருட்டு வழக்கு
சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ராம் விஷ்னோய் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் குடியேறிய ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவருடன் காமராஜ் நட்புறவு ஏற்படுத்திக் கொண்டுள்ளார், நகரங்களில் மொபைல்களைத் திருடும் யோசனையை காமராஜுக்கு அந்த நபர் அறிமுகப்படுத்தியுள்ளார்’ என்று கூறினார்.
ஜெய்ப்பூரில் 100 திருட்டு வழக்குகளில் காமராஜ் மற்றும் அவரது ஆட்கள் சம்பந்தப்பட்டிருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர் .
‘குற்றம் சாட்டப்பட்டவர்கள் நகரத்தில் உள்ள விடுதிகளில் நுழைய துப்புரவாளர்கள் போல் காட்டிக் கொண்டு மாணவர்கள் தூங்கும்போது அவர்களின் அறைகளுக்குள் நுழைந்து அவர்களின் மின்னணு பொருட்களைத் திருடி வந்துள்ளனர்’ என்று ஒரு அதிகாரி கூறினார்.
காமராஜ் அறையில் சோதனை
ஹசன்புரா அருகே உள்ள காமராஜின் மூன்று அறைகளில் போலீசார் சோதனை நடத்தியதில் 45 விலையுயர்ந்த மொபைல் போன்கள் மற்றும் 10 மடிக்கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
1000 ரூபாய் கமிஷன்
விசாரணையின் போது, இந்த குற்றங்களுக்காக தனது சொந்த கிராமத்தைச் சேர்ந்த ஆண்களை வேலைக்கு அமர்த்தியதாக காமராஜ் போலீசாரிடம் கூறினார்.
‘காமராஜ் தனது ஆட்களுக்கு ரயில் டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்தார். அவர்கள் தமிழகத்திலிருந்து ஜெய்ப்பூருக்கு வந்து, மொபைல்களைத் திருடி, ஒவ்வொரு மொபைலுக்கும் ரூ 1,000 கமிஷன் பெற்ற பிறகு திரும்புவார்கள்’ என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காமராஜ் தனக்கு தெரிந்த நபருக்கு ரூ 3000 க்கு ஒரு மொபைல் போனை விற்றதாக போலீசார் தெரிவித்தனர். ‘ஜெய்ப்பூரின் ஹசன்புரா பகுதியில் காமராஜ் மூன்று அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளார்.
அவர் கொள்ளைக்கு வெவ்வேறு மனிதர்களைப் பயன்படுத்தியுள்ளார். அவர் தனக்காக ரூபாய் 2,000 வைத்துக்கொண்டு, தொலைபேசியைத் திருடியதற்காக உதவியாளர்களுக்கு ரூபாய் 1,000 கொடுப்பார்’ என்று திருட்டு கும்பலை சார்ந்த ஒரு நபர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களாக ஜெய்ப்பூரில் காமராஜ் கொள்ளை நடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது