கல்விதமிழ்நாடு

இனி அண்ணா பல்கலைக்கழகத்திலும் டேரக்ட் செகண்ட் இயர்.. பாலிடெக்னிக் மாணவர்களுக்கு அடித்த ஜாக் பாட்!

பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு படிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் இதுபோன்ற சேர்க்கை நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த ஆண்டு முதல் முதல்வரின் ஆணையின்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலிடெக்னிக் படித்தவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவைக் கூட்டம், கேள்வி நேரத்துடன் தொடங்கியது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அமைச்சர்கள் பதிலளித்தனர். தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், தனது தொகுதியில் பாலிடெக்னிக் கல்லூரி திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “தமிழகத்தைப் பொருத்தவரையில் மொத்தம் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 34 அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசின் இணைவு பெற்ற 40 கல்லூரிகள் இருக்கின்றன. சுயநிதிக் கல்லூரிகள் 406 உட்பட மொத்தம் 509 பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொருத்தவரை, தனியார் கல்லூரிகளில் மட்டும் மொத்தம் 5010 இடங்கள் உள்ளன. ஆனால், இதில் 1,879 பேர்தான் சேர்ந்து படிக்கின்றனர். மீதமுள்ள 3031 இடங்கள் இன்னும் காலியாகத்தான் இருக்கின்றன. உறுப்பினர்கள் கூறியதைப்போல், கொஞ்சம் கட்டணம் அதிகமாக இருந்ததால் கூட மாணவர்கள் சேராமல் இருக்கலாம். ஆனால், அரசு பாலிடெக்னிக்குகளிலும் மாணவர் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது. இதனை எண்ணத்தில் கொண்டுதான், தமிழக முதல்வர் வெளியிட்ட மானியக் கோரிக்கையில், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 5 புதிய பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது” என்று அமைச்சர் பொன்முடி விளக்கமளித்தார்.

மேலும், அமைச்சர் பொன்முடி பேசியது: “பாலிடெக்னிக்குகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும். அதைவிட முக்கியம், பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு சேரலாம். ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற சேர்க்கை நிறுத்திவைக்க பட்டிருந்தது . இந்த ஆண்டுமுதல் முதல்வரின் ஆணையின்படி, அண்ணா பல்கலைக்கழகத்திலும் பாலிடெக்னிக் படித்தவர்கள் இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேரமுடியும்.
மேலும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள நிலையில், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியிலும் கட்டண குறைப்பு தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கும்.

பாலிடெக்னிக் படித்தவர்கள் அண்ணா பல்கலை பொறியியல் படிப்புகளில் சேரமுடியாது என்ற முறை மாற்றப்பட்டு, தற்போது, பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு சேரலாம் என்றார்.பாலிடெக்னிக் படிக்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பை பொருத்துதான் கல்லூரிகளில் சேர்க்கையும் அதிகரிக்கிறது. இதில் முதல்வர் மிக முக்கிய கவனம் கொண்டு, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க துரித நடவடிக்கைகள் எடுக்க ஆணையிட்டுள்ளார். எனவே, தமிழகத்தில் வரும்காலங்களில் பாலிடெக்னிக் படிப்புகள் வளரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தேவையின் அடிப்படையில் புதிய கல்லூரிகள் அமைப்பது தொடர்பான கோரிக்கைகள் கவனிக்கப்படும்” என்றும் அமைச்சர் பொன்முடியின் பேச்சு அமைந்தது.

Related posts