பயணம்

ஐ!!!ரோப்பா – அழகின் வசிப்பிடம் ஹங்கேரி – பாகம் 2

டிஹானி (Tihany) :

பாலாடன் (Balaton ) எரிக்கரியில் அமைந்திருக்கும் விடுதி உண்மையாகவே ஒரு சிறு தீவாகும். இங்கு வாகனங்கள் அனுமதிக்கப்படாத காரணத்தால், நடைபயணமாக இந்த தீவை சுற்றி பார்க்கலாம். பதினேழாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட Benedictine Abbey என்னும் இடம் இந்த ஏரியின் முழு அழகையும் ரசிக்க ஏற்ற இடமாக அமைகிறது. இந்த தீவு முழுவதும் வளர்ந்துள்ள பாதாம் மரங்களும், அவற்றில் பூக்கும் பூக்களும் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. ஆண்டுதோறும் ஜூன் மாதம் லாவெண்டர் பூக்களின் வாசம் இந்த தீவை முழுவதுமாக சூழ்ந்திருக்கும். இந்த தீவுக்கு அருகிலேயே ஒரு பழங்கால துறைமுகமும் உள்ளது. படகுகள் வந்து செல்லும் இந்த துறைமுகத்திலிருந்து, சுற்றி இருக்கும் மற்ற தீவுகளுக்கும் படகு சவாரி மேற்கொள்ளப்படுகிறது.

Lillafüred குகைகள் :

Bükk மலைத்தொடரில் அமைந்திருக்கும் இந்த Lillafüred குகைகள் அமைந்துள்ளன. கடைப்பனியூழிக் காலத்தில் (Ice Age) உருவான குகைகள் இவை. பழங்கால குகைவாசிகள் பயன்படுத்திய கருவிகள் மற்றும் ஆயுதங்கள் இந்த குகைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

Hortobágy தேசிய பூங்கா :

கிழக்கு ஹங்கேரியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த தேசிய பூங்கா, ஒரே நேரத்தில் இயற்கை அழகையும், ஹங்கேரி நாட்டின் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.1973 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த தேசிய பூங்கா தான், ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய இயற்கையான புல்வெளி ஆகும் . எண்ணற்ற விலங்குகளையும் பறவைகளையும் இங்கே காணலாம். இரவில், வானில் தெளிவாக தெரியும் விண்மீன் கூட்டத்தை காண ஏராளமான மக்கள் இங்கே கூடுகின்றனர். மலையேற்றம் , மிதிவண்டி பயணம், குதிரையேற்றம் என பல்வேறு சாகச நிகழ்வுகளும் இங்கே நடத்தப்படுகின்றன. இந்த பிரம்மாண்டமான தேசிய பூங்காவில் ஒரு அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது.

திறந்தவெளி அருங்காட்சியகம் :

புடாபெஸ்ட் நகரத்தில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அருங்காதசியகம் உலகத்தரம் வாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. அரை நூற்றாண்டுக்கு முன் திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் ஹங்கேரி நாட்டின் பிரதான சுற்றுலா தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. எட்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை தத்ரூபமாக காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்த எட்டு பாகங்களையும் இணைக்கும் விதமாக நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் கண்டு மகிழ இங்கே பழங்கால நீராவி ரயில் பயணமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

சொப்ரோன் (Sopron) :
வியென்னாவிலிருந்து தெற்கே 64 கிலோமீட்டர் தொலைவில் , ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க நகரம், ஹங்கேரி நாட்டு சுற்றுலா பயணப்பட்டியலில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டிய இடமாகும். 240 க்கும் மேற்பட்ட மிக புராதனமான கட்டிடங்கள், பழமை மாறாமல் இந்த சொப்ரோன் நகரத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட ஹங்கேரி நாட்டை ஒரு முறை சுற்றி பாத்துட்டு வரலாமே !!!!

Related posts