விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்டு சிவகங்கையை சேர்ந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 242 பயணிகளுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று அதிகாலை சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் ராமசாமி (வயது 66) என்பவர் பயணித்துள்ளார்.
இந்த விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே வந்து கொண்டிருந்த போது, விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த மீனாட்சி சுந்தரத்திற்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விமான பணிப்பெண்கள் விமானிக்கு தகவல் தெரிவித்த நிலையில், உடனே விமானியும் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, பயணி ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதால் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாக கூறியுள்ளார்.
மேலும் உடனடியாக விமானத்தை தரையிறக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும், மருத்துவக் குழுவினரை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் தெரிவித்துள்ளார். விமானியின் கோரிக்கையை ஏற்று, விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் மருத்துவ குழுவினரை தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டனர். மேலும் விமானம் தரையிறங்க வேண்டிய நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
விமானம் தரையிறங்கியதும், விமான நிலைய மருத்துவக் குழுவினர் விமானத்திற்குள் சென்று மீனாட்சி சுந்தரத்துக்கு முதலுதவி அளித்தனர். ஆனால் நிலைமை மோசமாகவே, அவரை விமானத்திலிருந்து கீழே இறக்கி, விமான நிலைய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் மீனாட்சி சுந்தரத்தை பரிசோதனை செய்தனர். அப்போது மீனாட்சி சுந்தரம் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இது குறித்து தகவலறிந்த சென்னை விமான நிலைய போலீசார், பயணியின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், பயணி மீனாட்சி சுந்தரம் ராமசாமியின் மகள் மலேசியாவில் வசித்து வருவதும், அங்கு இவர் சென்றிருந்த போது அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டதும் தெரிய வந்துள்ளது. மேலும், அறுவை சிகிச்சை முடிந்த கையோடு சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்த மீனாட்சி சுந்தரத்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

