அரசியல்ஆன்மீகம்இந்தியாதமிழ்நாடு

மாம்பலம் அயோத்திய மண்டப நிர்வாக வழக்கு – சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு!

மாம்பலம் அயோத்திய மண்டப நிர்வாக வழக்கு – சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு!

அயோத்தி மண்டபத்தை அறநிலைத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் எந்த ஒரு இடைக்கால தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அறநிலைத்துறை நடவடிக்கை

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் ஸ்ரீ ராம் சமாஜ் என்ற தனியார் அமைப்பு அயோத்திய மண்டபத்தை நிர்வகித்து வந்தது. அங்கு சாமி சிலைகள் வைத்து வழிபாடுகள் செய்வதாகவும், பொது மக்களை வழிபாட்டிற்கு அனுமதிப்பதாகவும், உண்டியல் வைத்து மக்களிடம் பணம் வசூலிப்பதாகவும் குற்றசாட்டுகள் எழுந்தன. இதை தொடர்ந்து அறநிலைத்துறை, கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அயோத்திய மண்டபத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதுமட்டுமின்றி தேனாம்பேட்டை பாலசுப்ரமணிய கோவிலில் பணியாற்றி வந்த செயல் அலுவலரை அயோத்தி மண்டபத்தின் தக்கராக நியமித்தது.

உயர்நீதி மன்றம் தீர்ப்பு

இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் அயோத்திய மண்டபத்தின் சார்பாக 2014ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அதில் மனுதாரர் தரப்பு கூறியது: இது ஒரு தனியார் மண்டபம் மட்டுமே தவிர, இது கோவில் இல்லை என்றும், இங்க ஆகம விதிப் படி எந்த ஒரு சாமி சிலையும் வைத்து வழிபடவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும், ராமநவமி, பிரதோஷம் போன்ற சில சிறப்பு நாட்களில் மட்டுமே வழிபாடுகள் நடந்ததாகவும் வாதிட்டனர்.

இதை எதிர்த்து வாதிட்ட அரசு தரப்பு கூறியது: அயோத்தி மண்டபத்தில் சாமி சிலைகளை வைத்து வழிபட்டதுடன், துளசி தீர்த்தங்கள் கொடுக்கிறார்கள். வழிபாட்டிற்கு பொது மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இங்கு உண்டியல்கள் வைத்து மக்களிடம் பணம் வசூலிக்கிறார்கள் என்றும் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதத்தையும் விசாரித்த நீதிபதி வீ.எம். வேலுமணி கடந்த மாதம் மார்ச் 17ம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதில், ‘இரு தரப்பு வாதத்தை மட்டும் வைத்து இது கோவிலா இல்லை மண்டபமா என்று இந்த ரிட் வழக்கு மூலம் தீர்ப்பு சொல்ல இயலாது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என்றார்.

மேல்முறையீடு

இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பின் தலைவர் எஸ். ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதில் அவர் கூறியிருப்பது: எங்களது ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பு கடந்த 1958ம் ஆண்டு தொடங்கப்பட்டது. எங்கள் அமைப்பில் 700க்கும் மேற்பட்ட உறுப்பினார்கள் இருக்கிறார்கள். எங்கள் அமைப்பு லாப நோக்கமின்றி சேவை மனப்பான்மையோடு செய்பட்டு வருகிறது.

மேலும், அயோத்தி மண்டபம் சாதி சமய மதங்களுக்கு அப்பாற்பட்டு ஏழை எளிய மக்களின் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது. இந்த மண்டபத்தில் கலை,கலாச்சாரம் சம்மந்தப்பட்ட பல ஆன்மிக கூட்டங்களும், திருமணங்களும் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் ராமநவமின் பொழுது ராமபிரான், சீதை, லட்சுமண் மற்றும் அனுமன் சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி அயோத்திய மண்டபத்தை அறநிலைத்துறை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது மட்டுமின்றி அயோத்திய மண்டபத்துக்கு தக்கரை நியமிப்பது சட்டவிரோதமான செயல் என்று குறிப்பிட்டார்.

இடைக்கால தடை இல்லை

நேற்று (12-04-2022) இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்செல்வி முன் விசாரணைக்கு வந்தது. ஸ்ரீ ரேம் சமாஜ் சார்பாக ஆஜரான மூத்த வக்கீல் சதீஷ் பராசரன் ‘இந்த அமைப்பில் முன்னாள் இருந்த சில நபர்கள் தங்களின் சொந்த பிரச்சனைக்காக பல வதந்திக்களை கிளப்பி பொய் புகார்களை கொடுத்துள்ளனர் என்றார்.

இதை எதிர்த்து வாதிட்ட அரசு தரப்பு அட்வகேட் ஜெனரல் ஆர் சண்முகசுந்தரம், ‘இந்த வழக்கில் தக்கரை நியமித்ததுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்தது என்று குறிப்பிட்டு இருந்தார். அதை தொடர்ந்து தக்கர் நேற்று பதவியேற்று கொண்டார். மேலும், வழக்கம் போல எல்லா நிகழ்ச்சிகளும் நடைபெற எந்த தடையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் அயோத்திய மண்டபத்துக்குள் யாருவேண்டுமானாலும் செல்வதற்கும், திருமண நிகழ்ச்சிகளுக்கும் எந்த தடையும் இல்லை என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘இந்த வழக்கை ஏப்ரல் 21ந் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். அதற்குள் தமிழ்நாடு அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், அதுவரை இந்த வழக்கில் எந்த ஒரு இடைக்கால தடையும் விதிக்க முடியாது’ என்று தீர்ப்பளித்தனர்.

பாஜகவினர் கைது


அயோத்திய மண்டபத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததற்கு எதிராக பாஜகவினர் நேற்று சென்னை மாம்பலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அசோக் நகர் போலீசார் கைது செய்து அவர்கள் மீது 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்பு, நேற்று மாலை பாஜகவினர் அனைவரையும் போலீசார் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts