“தனி தமிழ்நாடு” குறித்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஆ.ராசாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
ஆ.ராசா பேச்சு
திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் மாநாடு நாமக்கல்லில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுகவின் முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ எனும் தலைப்பில் பேசினார். அப்போது அவர், முதலில் கூட்டாட்சிக்கு ஒப்புக்கொண்ட நேரு, பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.

ஆனால் எங்கள் பெரியார் இறுதிவரை தனி தமிழ்நாடு கோரிக்கை வைத்தார். அவரை பின்பற்றிய அண்ணாவும், கலைஞரும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற தத்துவதிலிருந்து விலகி ஜனநாயகத்துக்காக இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக பெரியரையே ஒதுக்கி வைத்துவிட்டு இந்தியா வாழ்க என்று நாங்கள் சொன்னோம். நான் பிரதமருக்கு, அமித் ஷாவுக்கு மெத்தப் பணிந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் அண்ணா வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எங்களை பெரியார் வழிக்குத் தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க வைத்துவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்’ என நாமக்கல்லில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் மாநாட்டில் பேசினார்.
சுப்பிரமணியன் சுவாமி கண்டனம்
ஆ.ராசாவின் பேச்சு நாடு முழுவதும் மிக பெரிய அதிர் வலை ஏற்படுத்தியது. பாஜக சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பாஜகவின் முன்னாள் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் ஆ. ராசா பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறியது, ‘ 2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசாவிற்கு ஜாமீனில்தான் கிடைத்துள்ளது. அதனால் தான் ஆ.ராசா இன்னும் வெளியில் இருக்கிறார். எனவே ஆ.ராசாவின் ஜாமீனை ரத்து செய்து ஆ. ராசாவை கைது செய்ய வேண்டும். ஆ.ராசாவுக்கு சிறை ஒன்றும் புதிதல்ல. ஆ ராசாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்’ என்று பாஜகவின் முன்னாள் எம்.பி சுப்பிரமணியன் சுவாமி.

