அரசியல்தமிழ்நாடு

அம்பேத்கர் – வடக்கில் உதித்த சமத்துவ சூரியன்.. முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

அண்ணல் அம்பேத்கர் வடக்கில் உதித்த சமத்துவ சூரியன்!

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், ‘அவரது பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும்’ என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து சட்ட பேரவையில் பேசிய, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், “அண்ணல் அம்பேத்கர் வடக்கில் உதித்த சமத்துவ சூரியன்; பலர் வாழ்வில் கிழக்காய் இருந்த பகலவன்;

சமூகம் ஏற்படுத்திய ஏற்றத் தாழ்வை, கல்வி சட்டம் அரசியல் எழுச்சி மூலமாக சமத்துவ படுத்திய போராளி; ‘இருட்டறையில் இருக்குதடா உலகம்; சாதி இருக்கிறதென்போனும் இருக்கின்றானே’ என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடைய வரிகளைப்போல, சாதிக் கொடுமையால் இருண்ட உலகத்தைத் தன்னுடைய பரந்த அறிவால், ஞானத்தால் விடிய வைத்த விடிவெள்ளி அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அவர் வேண்டாததை நீக்கிய சிற்பி; வேண்டியதைச் சேர்த்த ஓவியர்; அண்ணல் அறிவுச்சுடராய் விளங்கி அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துக்கொடுத்தவர். அவருடைய கருத்துக்கள் ஆழமும், விரிவும் கொண்டவை; எதிர்காலத்தின் ஒளிவிளக்கு அது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சமத்துவ நாள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பாக மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பெரியார் பிறந்தநாளை ‘சமூகநீதி நாளாக’அறிவித்தது போல, அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதியை ‘சமத்துவ நாள்’ என்று கொண்டாட வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்று, ஏப்ரல் 14 ஆம் தேதி இனி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்றும், சமத்துவ நாள் உறுதிமொழி தமிழ்நாடு முழுவதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் மகிழ்ச்சியோடு இந்த அவைக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று முதல்வர் தெரிவித்தார்.

தொல். திருமாவளவன் கோரிக்கை

நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திருமாவளவன், மணிமண்டபத்தில் அம்பேத்கரின் முழு உருவச்சிலையை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திருமாவளவனின் கோரிக்கையை ஏற்றார். மணிமண்டபத்தில் வெண்கலத்தினால் ஆன முழு உருவச்சிலை விரைவில் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

தமிழில் அச்சாகும் அம்பேத்கர் நூல்கள்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தில் பேசிய முன்னாள் நாடாளுமன்ற எம்.பியான மு.ராசா, அண்ணல் அம்பேத்கரின் நூல்களை அனைவரும் எளிமையாக படிக்கும் வண்ணம் தமிழ் மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். இதனை ஏற்று, அண்ணல் அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள், செம்பதிப்பாக தமிழில் வெளியிடப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

Related posts