இந்தியாவணிகம்

இந்தியாவில் உச்சத்தை தொடும் சில்லறை பணவீக்கம்.. ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை என்ன?

இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம்.. மார்ச் மாதத்தில், கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.95 சதவீதமாக உச்சம் தொட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலையேற்றத்தினால் நாட்டின் சில்லறை பணவீக்கம் 6.95 சதவீதம் உயர்ந்ததாக கூறப்படுகிறது.

பணவீக்கத்தை நடுத்தர கால அளவில் 4 சதவீதமாகவும், பணவீக்க உச்ச வரம்பை 6 சதவீதத்திற்குள் பராமரிக்கவும் ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், தொடர்ந்து 3வது மாதமாக பணவீக்கமானது ரிசர்வ் வங்கியின் இலக்கை காட்டிலும் அதிகரித்தப்படியே உள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தக் கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்றே, நுகர்வோர் விலைக் குறியீடானது (CPI) பிப்ரவரி மாதத்தில் 6.07 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி மாதம் 6.07 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் 6.95 சதவீதமாக உயர்ந்து வருகிறது. இறைச்சி, மீன் மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றின் விலை எதிர்பார்த்ததை விட அதிகம் உயர்ந்ததால் இந்த அளவிற்கு மார்ச் மாத சில்லறை பணவீக்கம் உயர்ந்ததாக கூறுகின்றனர். உணவு பணவீக்கம் 7.68 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்தில் 5.85 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் உலகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது, இது விநியோக சங்கிலியை பெரிய அளவில் பாதித்துள்ளது. இதனால், உலகளாவிய அளவில் சமையல் எண்ணெய் சப்ளை, தானிய விலையேற்றம், உர ஏற்றுமதி ஆகியவை சீர்குலைத்துள்ளது. இதுவே பணவீக்கம் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

பாமாயில், பாமலின் எண்ணெய் விலை இந்த ஆண்டு கிட்டதட்ட 50% அதிகரித்துள்ளது. இதனால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பணவீக்கத்தினால் மிக மோசமான பாதிப்பினைக் கண்டுள்ளனர். ஏற்கனவே கொரோனாவினால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்த மக்கள் தற்போது தான் மீண்டு வரத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் பணவீக்கம் மிக மோசமான உச்சத்தினை தொடுவது வருத்தம் அளிக்கும் விதமாக இருக்கிறது.