இந்தியாவின் புகழ்பெற்ற டென்னிஸ் வீரரும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான லியாண்டர் பயஸ், பாரதிய ஜனதா கட்சியில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
இந்திய அணியின் மூத்த டென்னிஸ் வீரராக அறியப்படுபவர் லியாண்டர் பயஸ். சர்வதேச டென்னிஸ் அரங்கில் இரட்டையர் பிரிவில் 8 பட்டங்களையும், கலப்பு இரட்டையர் பிரிவில் 10 பட்டங்களையும் வென்றுள்ள பயஸ், டேவிஸ் கோப்பை வரலாற்றில் அதிக இரட்டையர் வெற்றிகளைப் பெற்ற வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். இவற்றை தவிர, கடந்த 1996 அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான லியாண்டர் பயஸ், கடந்த 2021ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துகொண்டார். மேற்கொண்டு 2022-ம் ஆண்டு நடைபெற்ற கோவா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அதில் போட்டியிடவில்லை. ஆனால் அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில், எதிர்வரும் ஏப்ரல் 23 மற்றும் 29ஆம் தேதிகளில் மேற்கு வங்க சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அவர் திரிணாமுல் காங்கிர்ஸ் கட்சி தரப்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபகாலமாக அவர் திரிணாமுல் காங்கிரஸின் செயல்பாடுகளில் இருந்து விலகி இருந்தார். மேலும், திரிணாமுல் காங்கிரசில் இருந்த விலகி பாஜகவில் இணையவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு முன்னிலையில் இன்று அவர் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார்.
இந்த நிகழ்வில் பேசிய கிரண் ரிஜிஜு, “1952 ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு இந்தியா தனிநபர் பதக்கம் எதையும் வெல்லவில்லை. இதுகுறித்து நான் வருத்தமடைந்தேன். ஆனால் 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் லியாண்டர் பயஸ் மூலம் அது மாறியது. அதன் பிறகு நடந்த ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் இந்தியா பதக்கம் வென்று வருகிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “டேவிஸ் கோப்பையில் அதிக பதக்கங்களை வென்ற வீரர்களில் லியாண்டர் ஒருவர். அவர் தொடர்ந்து ஏழு ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவ்வளவு பெரிய ஒரு வீரர் ஒரு முடிவை எடுக்கிறார் என்றால், அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கும். கடந்த 2020ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற பயஸ், அதன் பிறகு மற்ற வீரர்களுக்கு உதவி வருகிறார். தற்சமயம் அவர் பாஜகவில் இணைந்தது பெருமைக்குரிய விஷயம். அவரை முழுமனதுடன் வரவேற்கிறேன்” என்று கூறினார்.
பாஜகவில் இணைந்தது குறித்து பேசிய லியாண்டர் பயஸ், “நான் 40 ஆண்டுகளாக நாட்டிற்காக விளையாடினேன். இனி நாட்டு மக்களுக்கும், இளைஞர்களுக்கும் சேவை செய்வேன். எனது பார்வையில் ‘கேலோ இந்தியா’ மற்றும் ‘டாப்ஸ்’ ஆகிய திட்டங்கள் விளையாட்டு வீரர்களுக்குச் சிறந்தவை. இந்தியா உலகின் மிக இளமையான நாடாகும். எதிர்வரும் 2036-ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம். நான் வளர்ந்த காலத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. இன்றும் கூட நம்மிடம் ஒரு உள்விளையாட்டு டென்னிஸ் மைதானம் இல்லை” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒலிம்பிக்கை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் நமக்கு நேரடித் தகுதி கிடைக்கும், ஆனால் அங்கு நாம் எதை வெளிப்படுத்தப் போகிறோம் என்பதே எனது கவலை. உலகின் மிகப்பெரிய கட்சியில் இணைந்தது ஒரு பெரிய விஷயம். நான் இந்தியாவின் மகன். இந்தியாவின் ஒவ்வொரு குழந்தையையும் அதிகாரமிக்கவர்களாக மாற்ற விரும்புகிறேன். கிரண் ரிஜிஜு தான் எனக்குத் தூண்டுதல். அவருக்கு விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் உள்ளது. இன்று எனக்கு ஒரு முக்கியமான நாள்” என்று தெரிவித்தார்.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், லியாண்டர் பயஸின் இந்த முடிவு அந்த மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர், இத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடவும் அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
