மாணவர்கள் எதிர்காலத்தில் தன்னலத்துக்காக இல்லாமல் நாட்டுக்காகவும், தமிழகத்திற்காகவும் பாடுபட வேண்டும் என தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அறிவுரை வழங்கினார்.
கிண்டியில் உள்ள சென்னை ஐஐடி-யில் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களின் “டெல்டா எக்ஸ்போ” (Delta Expo) கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. இதில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தமிழ்நாட்டில் பொறுப்பேற்ற பின்னர் இவர் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி-யின் இயக்குநர் காமகோடி உட்பட ஐஐடி மாணவர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், அவரின் உரையை தமிழில் வணக்கம் என கூறி தொடங்கினார். “இது தமிழகத்தில் நான் முதல்முதலில் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி. அதனால் வணக்கத்தை சொல்லாமல் இருக்க முடியாது. அனைவருக்கும் எனது இனிய வணக்கம். வணக்கத்தை நான் முறையாக உச்சரித்தேனா என்று தெரியவில்லை, உங்களுக்கு நான் சொன்ன விதம் புரிந்தது என்று நினைக்கிறேன்” என பேச தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், “உங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு திறன் உள்ளது. ஆளுநராக இருப்பதால் எல்லாம் எனக்கு தெரியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை. வளர்ச்சியடைந்த பாரத்திற்கு உங்களின் பங்களிப்பு இல்லாமல் எதுவும் இல்லை. உங்கள் புதிய கண்டுபிடிப்புகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கிறீர்கள். என்னை போன்ற பொது மனிதருக்கு இவையெல்லாம் கனவு போன்றது. நீங்கள் அந்த கனவில் வாழ்கிறீர்கள். உங்கள் செயல்பாடு உங்களுக்கானது மட்டுமல்ல, தமிழ்நாடு மக்கள், இந்திய மக்கள் மற்றும் மனித நேயத்திற்கானது” என மாணவர்கள் மத்தியில் உணர்ச்சிபூர்வமாக பேசினார்.
மேலும், “என் மாநிலம், என் நாட்டிற்காக நான் என்ன செய்யப் போகிறேன் என்று சிந்தித்து இருக்கிறேன். நான் 11-ஆம் வகுப்பு படிக்கும்போது தேர்வு முடிவுகள் அடுத்தநாள் செய்தித்தாளில் வரும். முதல் மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றவர்கள் பெயர் மெரிட் பட்டியலில் வரும். இப்போது 99 சதவிகிதம் கூட அதிகம் இல்லை. நீங்கள் 100 சதவிகிதம் பெற வேண்டியுள்ளது.
வளர்ச்சியடைந்த பாரத்திற்கு முக்கியமான கருவிகளாக மாணவர்கள் உள்ளார்கள். எதிர்காலத்தில் தன்னலத்துக்காக இல்லாமல் நாட்டுக்காகவும், தமிழகத்திற்காகவும் பாடுபட வேண்டும். மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் அனைவருக்கும் பயன்பட வேண்டும். நம் நாட்டில் மட்டுமில்லை உலகம் அறிந்ததது சென்னை ஐஐடி, இங்கிருந்து வரும் கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் பாராட்டப்படும்” என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

