தனியார் கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த 31 வயதான பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மருத்துவ அலட்சியமே காரணம் என்று குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னையை அடுத்த பெருங்களத்தூர் அருகே ஊரப்பாக்கம், ஆதனூரைச் சேர்ந்த தம்பதி ஆனந்த் பிரகாஷ் (வயது 33)-அமலா சோஃபியா (வயது 31). ஆனந்த் பிரகாஷ் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினர், குழந்தைப் பேறுக்காக மந்தைவெளியில் உள்ள தனியார் கருத்தரிப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இந்த நிலையில் அமலா சோஃபியா கருப்பையில் இருந்த நீர்க்கட்டியை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, நேற்று (மார்ச் 14) அந்த பெண்ணிற்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்கு பிறகு சுமார் ஒரு மணி நேரம் கழித்து அவர் சுயநினைவுக்கு திரும்புவார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனினும் அவர் எழுந்திருக்காததால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அமலா சோஃபியா உயிரிழந்துவிட்டதாகக் கூறினர்.
இதையடுத்து, கதறி அழுத கணவர் ஆனந்த் பிரகாஷ் மற்றும் குடும்பத்தினர், சம்மந்தப்பட்ட கருத்தரிப்பு மையம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து, அமலா சோஃபியாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வெளியே பெண்ணின் குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த ராயப்பேட்டை காவல்துறை உதவி ஆணையர் இளங்கோவன் தலைமையிலான காவல்துறையினர், நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்கள் கலைந்துச் சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் பிரகாஷ், “அறுவைச் சிகிச்சைக்கு பிறகு தனது மனைவி எழுந்திருக்கவில்லை; அவர் இன்னும் சிகிச்சையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். தொடர்ந்து எழுந்திருக்காததால் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அவர் அங்கு சென்றவுடன் உயிரிழந்துவிட்டார்” எனத் தெரிவித்தார்.
அமலா சோஃபியாவின் சகோதரர் ஆண்டனி கூறுகையில், “தனது சகோதரியின் மரணத்திற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமும், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததுமே காரணம்; மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் சோஃபியாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இந்த சம்பவம் குறித்து அபிராமபுரம் காவல்துறையினர், 196 BNS சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அபிராமபுரம் காவல்நிலைய ஆய்வாளர் முகுந்தன் கூறுகையில், “பெண்ணின் மரணம் குறித்து சம்மந்தப்பட்ட கருத்தரிப்பு சிகிச்சை மைய நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினோம். அதில் உயிரிழந்த பெண் பருமனாக இருந்ததாகவும், அதற்காக மயக்க மருந்துக் கொடுத்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், எனினும் போதிய ஆக்சிஜன் அவருக்கு கிடைக்காததால் உயிரிழந்ததாகவும் கூறினர். இது தொடர்பாக மருத்துவக் கவுன்சில் மற்றும் மருத்துவ சேவைகள் இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணை நடத்தி வழங்கும் அறிக்கை மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

