தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை, இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிந்து கொலை செய்த சம்பவம் நடுநடுங்க வைத்துள்ளது.
புதுச்சேரி நேதாஜி நகரை சேர்ந்தவர் ஷர்மிளா(28). இவர் புதுவை அண்ணாசாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் இந்திரா நகரை சேர்ந்த டிரைவர் ஜோசப்(36) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, சில மாதங்களாகவே ஜோசப் ஷர்மிளாவை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார்.
ஜோசப்பிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியிடம் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையே ஜோசப்பின் நடவடிக்கை ஷர்மிளாவுக்கு பிடிக்காத காரணத்தால், அவரிடம் பேசுவதை நிறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், ஷர்மிளாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில், தொடர்ந்து அப்பெண்ணுக்கு ஜோசப் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
மேலும், தன்னை காதலிக்குமாறு ஷர்மிளா செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று, தொந்தரவு கொடுத்து வந்துளார். இதனால் கோபமடைந்த ஷர்மிளா ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், ஜோசப்பை அழைத்த போலீசார், எச்சரித்து அனுப்பியுள்ளார்.
தன் மீது புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த ஜோசப், நேற்று முன்தினம் (மார்ச் 13) இரவு வழக்கம்போல வேலை முடிந்து சென்று கொண்டிருந்த ஷர்மிளாவை பின் தொடர்ந்து சென்றுள்ளார். சுமார் 9 மணியளவில் உழவர்சந்தை வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த ஷர்மிளாவை, தனது நண்பருடன் பைக்கில் சென்று வழிமறித்த ஜோசப், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளார்.
அதனால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ஜோசப், ஏற்கனவே ஒரு பாட்டிலில் வாங்கி தயாராக வைத்திருந்த பெட்ரோலை சர்மிளா மீது ஊற்றி தீ வைத்துள்ளார். உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில், வலியில் அலறி துடித்த ஷர்மிளா 100 அடி தூரம் நெருப்புடன் ஓடியுள்ளார்.
அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக தீயை அணைத்தனர். பின்னர், படுகாயமடைந்த ஷர்மிளாவை மீட்ட அப்பகுதி மக்கள் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 80 சதவீத தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட ஷர்மிளாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, ஜோசப் ஒதியஞ்சாலை காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். பெட்ரோல் ஊற்றி தீ வைக்கும் போது ஜோசப் கையிலும் தீக்காயம் ஏற்பட்டிருந்தது என்பதால், அவரை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தொடர்ந்து, ஷர்மிளா அளித்த புகாரின் அடிப்படையில், ஜோசப் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரித்து வந்தனர். இந்த நிலையில், 80 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ஷர்மிளா, சுமார் 15 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு நேற்று (மார்ச் 14) காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதையடுத்து, கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

