ஆடு திருடிய குற்றச்சாட்டில் சிக்கியவரை பொதுமக்கள் மத்தியில் காலால் எட்டி உதைத்த காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆடு திருடர்கள்
ஈரோடு மாவட்டம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி நாகராஜ். கடந்த இரண்டு நாட்களாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் விவசாயி நாகராஜ் வளர்த்து வந்த ஆடுகளை பட்டப்பகலில் தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக திருடி வந்தனர். அப்போது மறுநாள் ஆடு திருடுவதை கண்ட நாகராஜ் சத்தம் போட்டு கத்தியுள்ளார்.
சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆட்டை திருடிச் சென்ற நபர்களை விரட்டி பிடித்த போது, அதில் ஒருவர் பிடிப்பட மற்றொருவர் தப்பி ஓடியுள்ளார். பிடிபட்ட நபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து அருகில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
எட்டி உதைத்த போலீஸ்
சம்பவ இடத்திற்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி காவல்துறை உதவி ஆய்வாளர் முருகேஷ், ஆடு திருடிய நபரிடம் விசாரணை நடத்தினார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அந்த நபரின் உயிர்நாடியான அந்தரங்க பகுதியில் எட்டி உதைத்தார்.
எதிர்ப்பு
இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் அதிமாக பகிரப்பட்டு வருகிறது. ஆடு திருடிய நபரை காவல்துறையினர் விசாரணை செய்யாமல் பொதுமக்கள் மத்தியில் காலால் எட்டி உதைத்த உதவி ஆய்வாளர் முருகேஷனின் செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி ஆய்வாளர் முருகேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பணியிடை நீக்கம்
உதவி ஆய்வாளர் முருகேசனின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.