777 சார்லி படத்தை பார்த்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கண்ணீர் விட்டு அழுத காட்சி அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
777 சார்லி
கன்னட சினிமாவின் முன்னனி நடிகரான ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் இயக்குநர் கிரண்ராஜ் இயக்கிய படம் 777 சார்லி. படம் மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என்று ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. கடந்த 10ம் தேதி வெளியான இத்திரைப்படத்தை தமிழில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
எதார்த்தமான படம்
கிரிக் பார்ட்டி, அவனே ஸ்ரீமன் நாராயணா போன்ற படங்களின் மூலம் பிரபலமான கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி இந்த படத்தில் நடித்துள்ளார். பொதுவாக நாய்களை வைத்து படம் எடுத்தாலே நாயின் குறும்புத்தனங்கள், சாகசங்கள் என்று வேடிக்கையாக கதை சொல்வது வழக்கம். ஆனால் இந்த படத்தில் ஒரு மனிதருக்கும் நாய்க்குமான பாசப் போராட்டத்தை மிக எதார்த்தமாக காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஒரு சிறிய படமாக இருந்தாலும் பார்ப்பவர்களை கண் கலங்க வைத்துள்ளது.
பாராட்டு மழை
தமிழிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதால் திரையரங்கின் எண்ணிக்கை தற்போது கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் தமிழ் நடிகர் பாபி சிம்ஹா முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். கே ஜி எஃப் படத்திற்கு பிறகு வெளியான 777 சார்லி படத்தினால் அனைவருக்கும் கன்னட சினிமா மேல் ஒரு மரியாதையை உருவாக்கியிருக்கிறது.
கர்நாடக முதல்வர் நெகிழ்ச்சி
அந்த வகையில் தற்போது கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு 777 சார்லி படத்தின் சிறப்பு காட்சி திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த பின்னர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களை சந்தித்தார். பேசிக் கொண்டிருக்கும்போதே உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். மேலும், இந்த படம் இறந்து போன தனது நாயை நினைவு படுத்தியதாக கூறினார்.
படத்தை பார்த்து கர்நாடக முதலமைச்சர் கண்கலங்கிய இந்த சம்பவம் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.