வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் ரூ. 50,000-க்கும் அதிக மதிப்பிலான பொருட்கள் கொண்டு வந்தால் கட்டாயமாக சுங்க வரி கட்ட வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆன்மிக சுற்றுலா
கடந்த 2017ம் ஆண்டு இலங்கையில் இருந்து வந்த சந்திரசேகர், விஜய்சுந்தரம் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 4 நபர்கள் விமானம் மூலமாக சென்னை வந்தனர். ஆன்மிக சுற்றுலாவுக்கு இந்திய வந்த அவர்கள் 1,594 கிராம் கொண்ட தங்க நகைகளை அணிந்து வந்துள்ளனர். அதன் மதிப்பு சுமார் 43 லட்சம். அது தவிர 112 வெளிநாட்டு மதுபான பாட்டில்களை எடுத்து வந்துள்ளனர்.
நீதிமன்றத்தில் வழக்கு
அவர்களை தடுத்த சுங்கத்துறை அதிகாரிகள் சந்தரசேகர் மற்றும் விஜய்சுந்தரம் உள்ளிட்ட இருவருக்கும் அபராதம் விதித்தனர். இதனை எதிர்த்து சந்தரசேகர், விஜய்சுந்தரம் அவரின் மனைவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
விசாரணை
இந்த மனு நீதிபதி சரவணன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் ரூ. 50,000-க்கும் அதிக மதிப்பிலான பொருள்கள் கொண்டு வந்தால், அதற்கு சுங்க வரி செலுத்த தேவையில்லை. இதற்கு 2014ம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தங்களுக்கு விலக்கு அளித்து அபராதத்தை ரத்து செய்யவேண்டும் என வாதிட்டார்.
வாதத்தை ஏற்க மறுப்பு
ஆனால் மனுதாரரின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி சரவணன், வெளிநாட்டினர் உடமைகள் விதி 1998ம் ஆண்டின் சட்டத்தின்படி கீழ் தான் கேரள உயர்நீதிமன்றம் 2014ம் ஆண்டு இந்த உத்தரவை பிறப்பித்தது. ஆனால் அதன் பிறகு 2016ம் ஆண்டு புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரும் பொருட்களின் மதிப்பு ரூபாய் 50,000க்கும் மேல் இருந்தால் அதற்கு சுங்கவரி செலுத்த வேண்டும் என தெரிவித்தார். மேலும், ஆன்மிக சுற்றுலாவுக்கு தங்க நகைகள் மற்றும் மதுபான பாட்டில்கள் ஏன் ? என கேள்வி எழுப்பினர்.
சுங்க வரி கட்டாயம்
மேலும், 50,000 ரூபாய் மதிப்பிற்கு அதிகமான பொருள்களை எடுத்துவரும் போது அதற்கான உறுதி மொழியை சம்மந்தபட்டவர்கள் சுங்க துறையிடம் அளிக்க வேண்டும் என் உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார். தொடர்ந்து சுங்க வரித்துறை உத்தரவில் எந்த விதமான தவறும் இல்லை என கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதனால் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள் ரூ 50,000க்கும் அதிக மதிப்பிலான பொருட்கள் எடுத்து வந்தால் சுங்க வரி செலுத்தவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.