விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினும் நடிகர் கமல்ஹாசனும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளனர்.
விக்ரம் படம்
கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 3ம் தேதி வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் விக்ரம். இந்த படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். சுமார் 3 மணி நேரம் ஓடும் இத்திரைப்படத்தின் காட்சிகள் விறுவிறுப்பாக நகர்வதால் பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.
ரிப்பீட் ஆடியன்ஸ்
திரையரங்கில் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் வந்து படம் பார்க்கிறார்கள். இதனால் படத்தின் வசூல் அதிகரித்துள்ளது. படம் வெளியான இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் சுமார் 25 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது. இதனால் கமல் நடித்த படங்களிலேயே முதல் இரண்டு நாட்களில் மிக அதிகமாக வசூல் செய்த படம் என்ற பெயரை பெற்றுள்ளது. அதே நேரத்தில் தமிழகம் தாண்டி அண்டை மாநிலம், நாடுகள் என்று அனைத்து இடங்களிலும் விக்ரம் வசூல் சாதனை செய்து வருகிறது.
வசூல் சாதனை
படம் வெளியாகி 10 நாட்கள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், விக்ரம் உலகம் முழுவதும் 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் விக்ரம் படம் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மாபெரும் வெற்றியை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு கமல்ஹாசன் லெக்சஸ் என்ற சொகுசு காரை பரிசளித்தார்.
மேலும், விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் என்ற கதாப்பாத்திரம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சில நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றும் காட்சியில் சூர்யா நடித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரோலக்ஸ் வாட்ச்சை கமல்ஹாசன் பரிசளித்தார்.
மு.க.ஸ்டாலின் பாராட்டு
இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தார். இந்த சந்திப்பின் போது விக்ரம் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன் அருகில் இருந்தார். மேலும், விக்ரம் படத்திற்கு மு.க.ஸ்டாலின் தனது பாராட்டை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அரசியல் ரீதியாக பலமுறை முதல்வர் ஸ்டாலினை கமல் விமர்சித்திருக்கும் நிலையில் இன்று இருவரும் சந்தித்து பேசியுள்ளது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.