அரசியல்சினிமாவெள்ளித்திரை

சுதீப் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை!

கன்னட மொழி திரைப்படமான ‘கே.ஜி.எஃப்2’ சமீபத்தில் இந்தியா முழுவதும் வெளியாகி வெற்றிபெற்று உலகம் முழுவதும் 700 கோடிக்கும் அதிகமான வசூல் பெற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்திற்கு முன்பு வெளியான ‘புஷ்பா’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் ஒரு திரைப்பட விழாவில் கலந்துகொண்ட கன்னட நடிகர் கிச்சா சுதீப்பிடம், கன்னட திரைப்படம் (‘கே.ஜி.எஃப்2’) பான் இந்தியா திரைப்படமாக வெற்றி பெற்றது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சுதீப், ‘பான் இந்தியா படம் கன்னடத்தில் தயாரிக்கப்பட்டதாக சொன்னீர்கள், ஒரு திருத்தம். இந்தி இனி தேசிய மொழி கிடையாது. பாலிவுட்டிலும் பான் – இந்தியா திரைப்படங்களை தயாரிக்கிறார்கள். அவர்கள் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெற்றியை பெற போராடுகிறார்கள். ஆனால் நாங்கள் எங்கும் வெற்றி பெறுகிறோம்’ என பேசி இருந்தார்.

அதற்கு பாலிவுட் நடிகர் அக்ஷய் தேவுகன், ‘அன்பு சகோதரரே, உங்கள் கூற்றுப்படி இந்தி தேசிய மொழி இல்லை எனில் எதற்காக உங்கள் மொழி படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்? இந்தி எப்பொழுதும் நம்முடைய தாய் மொழி ! தேசிய மொழியாக இருந்துள்ளது. எப்போதும் இருக்கும். ஜன கண மண!’ என ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு கிச்சா சுதீப் பதிலளித்தார் இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் இந்த சர்ச்சை குறித்து செய்தியாளர்களிடம் கூறியது,

‘பிராந்திய மொழிகள் முக்கியம், அந்தந்த மாநிலங்கள் தங்கள் பிராந்திய மொழியைப் பின்பற்றுகின்றன, சுதீப் கூறியது சரிதான். இதை அனைவரும் மதிக்க வேண்டும்’ என்றார்.

Related posts