தாரமங்கலத்தில் உணவக உரிமையாளரை கவுன்சிலர் மகன் தாக்கிய விவகாரத்தில், கவுன்சிலர் மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
உணவக உரிமையாளர்
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகில் உள்ள கோனகாப்பாடி ஊராட்சி அத்திக்காட்டானூர் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருக்கு 26 வயதில் செந்தில்குமார் என்ற மகன் உள்ளார். செந்தில்குமார் தாரமங்கலம் சேலம் பிரதான சாலையில் ஜோதி மேல்நிலை பள்ளி அருகில் அமைந்து இருக்கும் எஸ்.பி.குமரன் என்ற பெயரில் ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார்.
கவுன்சிலர் மகன்
இந்நிலையில், தாரமங்கலம் டீச்சர்ஸ் காலனி பகுதியில் வசிப்பவர் அரவிந்த். இவர் தாரமங்கலம் நகராட்சியின் 6வது வார்டு பெண் கவுன்சிலர் செல்வி என்பவரின் மகன். அரவிந்த் கடந்த 7ம் தேதி செந்தில்குமாரின் கடைக்கு சாப்பிட வந்துள்ளார். அப்போது அவர் ஆம்லட் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு செந்தில்குமார் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஆறிபோன ஆம்லட் ஒன்றை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தாக்குதல்
இதனிடையே இனி நீ எப்படி கடை நடத்துகிறாய் என்று பார்க்கலாம் என்று செந்தில்குமாரை, கவுன்சிலர் மகன் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. மேலும், தொலைபேசியில் தனது நண்பர்கள் 3 பேரை வரவழைத்த அரவிந்த், கடை உரிமையாளர் செந்தில்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் செந்தில் குமாரின் உடலில் பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து செந்தில்குமார் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வைரல் வீடியோ
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில்குமார் பேசிய வீடியோ ஒன்று சமுகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நான் 6 மாதங்களாக தாரமங்கலத்தில் ஹோட்டல் கடை நடத்தி வருகிறேன். கடந்த 6ம் தேதி ஒருவர் தனது ஹோட்டலுக்கு வந்து அது சரியில்லை, இது சரியில்லை என்று கூறினார். மேலும், அவர் மதுபோதையில் தகாத வார்த்தைகளால் திட்டி, என்னை மிரட்டினார். அதுமட்டுமின்றி நான்கு ஐந்து பேரை அழைத்து வந்து என்னை கடுமையாக தாக்கிவிட்டு சென்றனர் என்று செந்தில்குமார் கூறியுள்ளார்.
நடவடிக்கை
இது குறித்து பாதிக்கப்பட்ட செந்திகுமார் தாரமங்கலம் போலீசாரிடம் புகாரளித்துள்ளர். ஆனால் அவர் கவுன்சிலர் மகன் என்பதால் காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தான் தொடர்ந்து கடை நடத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.